×

நாடாளுமன்றத்தில் புதிய வரலாறு; மகளிர் இடஒதுக்கீடு சட்டம் கனவுகளை நனவாக்கும்: மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: நாடாளுமன்றம் புதிய வரலாறு படைக்கும் தருவாயில் இருப்பதாகவும், மகளிர் இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்படுவது கடந்த கால கனவுகளை நனவாக்கும் என்றும் பிரதமர் மோடி கூறி உள்ளார். மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை 2029ம் ஆண்டு மக்களவை தேர்தலிலேயே அமல்படுத்தும் வகையில் நாரி சக்தி வந்தன் அதினியம் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்காக வரும் 16ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த பெண்கள் சக்தி வணக்க மாநாட்டில் (நாரி சக்தி வந்தன்) பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:

நமது நாடாளுமன்றம் புதிய வரலாற்றை படைக்கும் தருவாயில் உள்ளது. அது கடந்தகால கனவுகளை நனவாக்கக் கூடிய, எதிர்கால தீர்மானங்களை நிறைவேற்றக் கூடிய புதிய வரலாறு. சமத்துவமிக்க இந்தியாவை உருவாக்குவதற்கான தீர்மானம் அது. இந்த சட்டத்தின் மூலம், சமூக நீதி என்பது வெறும் முழக்கமாக இல்லாமல், பணி கலாச்சாரத்தின் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறையின் இயல்பான பகுதியாக திகழும்.மாநில சட்டப்பேரவைகள் முதல் நாடாளுமன்றம் வரை பல ஆண்டுகளாக நீடித்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வரும் 16, 17, 18ம் தேதிகளாகும். இந்த முடிவு நமது காலத்தின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாக திகழும். இது பெண்களின் அதிகாரமளித்தலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முடிவு. பெண்மையின் வலிமைக்கும் கண்ணியத்திற்கும் செலுத்தப்படும் உண்மையான காணிக்கை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

காங். எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு: மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட இருப்பதால், வரும் 16, 17, 18ம் தேதி நடக்கும் 3 நாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கட்சியின் அனைத்து எம்பிக்களும் தவறாமல் அவையில் ஆஜராகுமாறு காங்கிரஸ் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டும் என்றும், கட்சியின் நிலைப்பாட்டிற்கு எம்பிக்கள் ஆதரவளிக்க வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

Tags : Parliament ,PM ,Modi ,New Delhi ,Lok Sabha ,
× RELATED ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை...