விகேபுரம், ஏப்.14: அம்பை சட்டமன்ற தொகுதியில் அரசு மகளிர் கல்லூரி, வேளாண் கல்லூரி, பாலிடெக்னிக் கொண்டு வருவதற்கு பாடுபடுவேன் என்று பத்தமடையில் பிரசாரத்தின் போது அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா வாக்குறுதி அளித்தார். அம்பை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பொதுமக்கள் மலர் தூவியும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளிப்பதுடன் தங்களது குறைகளையும் உரிமையோடு கூறி வருகின்றனர். அப்போது அவர்களிடம் மீண்டும் எம்எல்ஏவாக பொறுப்பேற்றவுடன் சட்டப்பேரவையில் குரல் எழுப்பி மக்களின் குறைகளை தீர்த்து வைப்பேன் என்று பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் உறுதியளித்து வருகிறார். நேற்று பத்தமடை, சேரன்மகாதேவியில் இசக்கி சுப்பையா பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ‘அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளின் நலன் கருதி பாபநாசம் முதல் கோபாலசமுத்திரம் வரை நெல்மணிகளை காத்திட நெல் குடோன் அமைக்கப்படும். வற்றாத ஜீவ நதியாம் தாமிரபரணி நம் அருகில் இருந்தும் பல இடங்களில் சீரான குடிநீர் கிடைப்பதில்லை. அதிமுக ஆட்சி வந்தவுடன் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் சீரான குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். தற்போது பெண்கள் வாங்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்படும். அம்பை சட்டமன்றத் தொகுதியில் கனிம வளங்கள் பாதுகாக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைவருக்கும் இலவசமாக பிரிட்ஜ் வழங்கப்படும். அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அம்பை தொகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, விவசாயக் கல்லூரி ஆகிய கல்லூரிகள் அமைப்பதற்கு பாடுபடுவேன். எனவே அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்’ என்றார். பிரசாரத்தின் போது புறநகர் மாவட்ட அவை தலைவர் கூனியூர் மாடசாமி சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் மாரீச் செல்வம், பேச்சாளர் மீனாட்சி சுந்தரம், நகரச் செயலாளர் சீனிவாசன் பழனிக்குமார், வக்கீல் மாரி கிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
