சீர்காழி, ஏப்.14: சீர்காழி சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்ககோரி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் 100% வாக்குப்பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி மற்றும் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு நடைபெற்றது. சீர்காழி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தொடங்கி வைத்தார்.
பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியின்போது துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சீர்காழி தாசில்தார் ராஜரத்தினம், தனி தாசில்தார்கள் பாபு, கணேசன், ரகு மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரிகள் மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.
