லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் நேற்று, குஜராத் டைடன்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 19வது தொடரின் 19வது போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. அதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து லக்னோ அணியின் துவக்க வீரர்களாக அய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். பிரசித் கிருஷ்ணா வீசிய 2வது ஓவரில் மிட்செல் மார்ஷ் 11 ரன்னில் வீழ்ந்தார்.
அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் (18 ரன்), முகமது சிராஜ் வீசிய 5வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து அய்டன் மார்க்ரம் (21 பந்து, 30 ரன்), பிரசித் கிருஷ்ணா வீசிய மந்திரப் பந்து வீச்சுக்கு இரையானார். தொடர்ந்து அமர்க்களமாக பந்து வீசிய பிரசித் கிருஷ்ணா, ஆயுஷ் படோனி (9 ரன்), நிகோலஸ் பூரன் (19 ரன்) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார். கொல்கத்தாவுடன் நடந்த போட்டியில் 54 ரன்கள் விளாசி வெற்றி தேடித்தந்த முகுல் சவுத்ரியும் (18 ரன்), பிரசித் கிருஷ்ணா பந்தில் வீழ்ந்தார்.
20 ஓவர் முடிவில் லக்னோ அணி, 8 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4, அசோக் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் குஜராத் அணியின் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இந்த இணை 45 ரன்கள் குவித்திருந்த நிலையில், திக்வேஷ் ரதி வீசிய 6வது ஓவரில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். அதன் பின், சுப்மன், ஜாஸ் பட்லர் இணை சேர்ந்து, லக்னோ வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இந்த இணை 84 ரன்கள் விளாசிய நிலையில், 15வது ஓவரில் சுப்மன் கில் (40 பந்து, 1 சிக்சர், 6 பவுண்டரி, 56 ரன்) ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் பட்லர் (37 பந்து, 11 பவுண்டரி, 60 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும், வாஷிங்டன் சுந்தர் (21 ரன்), ராகுல் தெவாட்டியா (10 ரன்) சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதையில் அழைத்து சென்றனர். அதனால், 18.4 ஓவரில் குஜராத் டைடன்ஸ் அணி, 3 விக்கெட் மட்டுமே இழந்து, 165 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. ஆட்ட நாயகனாக, குஜராத்தின் பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.
