திருவாரூர், ஏப். 11: 2022-23ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மூலம் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி மற்றும் வட்டார அளவிலும், மாவட்டம் மற்றும் மாநில அளவிலும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டு இந்த போட்டிகள் கடந்த 2022ம் ஆண்டு துவங்கி நடைபெற்று வருகிறது.
மேலும் முதலாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்பட்ட இந்த போட்டியானது 2023ம் ஆண்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு மாநில அளவில் முதலிடத்தை பிடித்த மாணவர்களுக்கு கலையரசன் மற்றும் கலையரசி என்ற பட்டங்கள் வழங்கப்பட்டதுடன் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு கல்வி சுற்றுலாவும் அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 945 அரசு பள்ளிகள் மற்றும் 125 அரசு உதவி பெறும் பள்ளி என மொத்தம் ஆயிரத்து 70 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் இந்த கலைதிருவிழா மூலம் பயனடைந்த மாணவ, மாணவிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
