×

குன்னூர் அருகே கன்றுக்குட்டியை கொன்று மரத்தில் தொங்கவிட்ட சிறுத்தை: எஸ்டேட் தொழிலாளர்கள்அச்சம்

குன்னூர்: குன்னூர் அருகே காட்டுமாட்டின் கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தை, அதை மரத்தில் தொங்கவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட உலிக்கல் அருகே உள்ள ட்ரூக் செல்லும் சாலையில் நான்சச் எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஒரு உயரமான சில்வர் ஓக் மரத்தின் உச்சில், காட்டுமாட்டின் கன்றுக்குட்டி ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக நேற்று வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ​சம்பவ இடத்திற்குச் சென்று வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

அப்போது, கன்றுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடி இருப்பது உறுதி செய்யப்பட்டது. வேட்டையாடிய உணவை மற்ற விலங்குகளிடமிருந்து பாதுகாக்க மரத்தின் மீது ஏற்றி வைக்கும் பழக்கம் சிறுத்தைக்கு உண்டு. அதன்படி இந்த கன்றுக்குட்டியையும் சிறுத்தை மரத்தின் உச்சிக்கு கொண்டு சென்று வைத்தது தெரியவந்தது. மரத்தில் சிறுத்தை ஏறியதற்கான ஆழமான நகக்கீறல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ​வனத்துறையினர், ​மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷசாங் ரவி உத்தரவின்பேரில், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

சிறுத்தை மீண்டும் தனது இரையைத் தேடி அதே இடத்திற்கு வரும் என்பதால், இறந்த கன்றுக்குட்டியின் உடலை அகற்றாமல் மரத்திலேயே விட்டுவிட்டு, அதைச்சுற்றிலும் நவீன கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். தேயிலைத் தோட்டப் பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Coonoor ,Druk ,Ulikkal ,Coonoor Forest Reserve ,Nilgiris district ,Nansach Estate ,
× RELATED சாதியை ஒழிப்பது மட்டுமே திருவிழாக்களின் நோக்கம் – ஐகோர்ட் மதுரை கிளை