×

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் தேடுதல் வேட்டை; ஐஎஸ் தீவிரவாத கும்பலில் 48 பெண்கள் சேர்ப்பு: கைதான தெலங்கானா பெண் குறித்து பரபரப்பு தகவல்

ஐதராபாத்: ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த பெண் தீவிரவாதியை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சஞ்சல்குடா பகுதியைச் சேர்ந்தவர் சயீதா பேகம் (38). இன்ஸ்டாகிராமில் 38 ஆயிரம் பின்தொடர்பாளர்களைக் கொண்ட இவர், கடந்த மார்ச் 25ம் தேதி விஜயவாடா போலீசாரால் கைது செய்யப்பட்டார். கணவரால் கைவிடப்பட்ட நிலையில், தனது 6 வயது மகன் மற்றும் முதிய பெற்றோரை காப்பாற்ற வீட்டு வேலை செய்து வந்த சயீதா பேகம், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். ‘கவாத்தீன்’ என்ற பெயரில் பெண்களுக்கான தனி தீவிரவாத பிரிவைத் தொடங்கி, அதில் 42 பெண்களைச் சேர்த்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வெடிகுண்டுகளைக் கையாளுதல் போன்ற பயிற்சிகளை அளித்து, இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.

ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சயீதா பேகம் மற்றும் முகமது ரஹமத்துல்லா ஷெரீப் உள்ளிட்ட 5 பேரை போலீசார் இன்று விஜயவாடாவுக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுடைய செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை தடய அறிவியல் நிபுணர்கள் மீட்டெடுத்துள்ளனர். அதில், பாகிஸ்தான் மத போதகர் இஸ்ரார் அகமது மற்றும் ஜாகிர் நாயக் ஆகியோரின் தீவிரவாத உரைகள், வெடிகுண்டு தயாரிக்கும் முறைகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், ‘பென்க்ஸ்’ என்ற ஆன்லைன் குழு மூலம் இளைஞர்களை மூளைச்சலவை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலுக்கு டெல்லி, மேற்கு வங்காளம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சீஷன் (19) என்ற வாலிபரையும், கர்நாடகாவின் பல்லாரியில் அப்துல் சலாம் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு நபரான அல்-ஹக்கீம் ஷுக்கூர் என்பவருடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, சயீதா பேகம் தரப்பு வக்கீல் கூறுகையில், ‘சயீதா பேகம் தனது சம்மதம் இல்லாமலேயே அந்த குழுக்களில் சேர்க்கப்பட்டார். அவர் உணவு தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு ஒரு விளம்பரத்திற்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை சம்பாதித்து தனது வாழ்வாதாரத்தை கவனித்து வந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையில்லை’ என்று கூறினார். தற்போது 6 பேர் போலீஸ் காவலில் உள்ள நிலையில், 7 மாநிலங்களில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags : ISIS ,Hyderabad ,Al Qaeda ,Sayeeda Begum ,Chanchalguda ,Hyderabad, Telangana ,
× RELATED மதுராவில் பெரும் சோகம்: யமுனை ஆற்றில்...