×

வாலிபரை கொன்ற வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை

சேலம்: சேலத்தில் கேரம் போர்டு விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொன்ற வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர்நகர் 5வது தெருவை சேர்ந்தவர் மனோஜ்குமார் (25). கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி மனோஜ்குமார் அன்னதானப்பட்டி நான்கு ரோடு பகுதியில் உள்ள கேரம்போர்டு கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மனோஜ்குமாருக்கும், அங்கிருந்த பாஷா (எ) சையத் காதர் பாஷா(35), பிரகாஷ் என்ற பாம்பு பிரகாஷ் (34) ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மனோஜ்குமாரை தாக்கினர்.

இதையடுத்து தனது வீட்டுக்கு சென்ற மனோஜ்குமார், இதுபற்றி தனது தம்பி விக்னேஷிடம் தெரிவித்தார். மணியனூரில் உள்ள எஸ்ஆர்எம் தோட்டம் பாண்டு நகரில் காலி இடத்தில் சையத் காதர் பாஷா, பிரகாஷ் ஆகியோர் இருப்பதாக விக்னேஷிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அன்று இரவு 10மணியளவில் விக்னேஷ் தனது நண்பர்களுடன் அங்கு சென்றார். அங்கிருந்த சையத் காதர் பாஷாவிடம் எதற்காக எனது அண்ணனை தாக்கினீர்கள் என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் சையத் காதர் பாஷா தரப்பினர் விக்னேஷூடன் சென்ற மனோஜ்குமாரை சரமாரியாக தாக்கினர்.

இதில் சம்பவ இடத்திலேயே மனோஜ்குமார் உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து பாஷா (எ) சையத் காதர் பாஷா(45), பிரகாஷ் (எ) பாம்பு பிரகாஷ்(44), பெரியசாமி (44), வீச்சுகுமார் (எ) குமார்(61), மதுராஜ்(48), நந்து (எ) நந்தகுமார்(48), அப்பளமணிகண்டன் (எ) மணிகண்டன்(50), மதுரக்கார சரவணன்(எ) சரவணன்(61), வெள்ளையன் மணி (எ) மணிகண்டன்(52) ஆகிய 9பேரையும் கைது செய்தனர். சேலம் எஸ்சிஎஸ்டி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசிங் நேற்று, 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறினார். மேலும், 9 பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தண்டனை பெற்ற அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Salem ,Salem Special Court ,Manoj Kumar ,5th Street, Valluvarnagar, Annathanapatti, Salem ,
× RELATED தமிழ்நாட்டில் புதிதாக...