×

ஏரியில் விழுந்த செல்போனை எடுக்க முயன்ற டெலிவரி ஊழியர் சடலமாக மீட்பு

வேளச்சேரி, ஏப்.10: பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் சாய்ராம் (24). ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்த இவர், கடந்த 7ம் தேதி இரவு தனது நண்பரான கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (25) என்பவருடன் நாராயணபுரம் ஏரியில் உள்ள மழைநீர் கால்வாய் மேல் உட்கார்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது சாய்ராமின் செல்போன் ஏரியில் தவறி விழுந்துள்ளது. இந்த செல்போனை சாய்ராமின் காதலி அவருக்கு பரிசாக வழங்கியது என்பதால், உடனே அவர் அந்த செல்போனை எடுப்பதற்காக ஏரியில் இறங்கி தேடினார். அப்போது திடீரென அவர் ஏரியில் மூழ்கி மாயமானார்.

இதையடுத்து அவரது நண்பர் நவீன்குமார் காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் பள்ளிக்கரணை காவல் நிலைய போலீசார் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாய்ராம் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று முன்தினம் வரை சாய்ராமின் உடல் கிடைக்கவில்லை. இதனால் அவர் மழைநீர் கால்வாயினுள் சென்று சிக்கி இருக்கலாம் என தெரியவந்ததால், கால்வாயின் ஒரு பகுதியில் ஏரி நீர் நுழையாதவாறு தடுப்பு ஏற்படுத்தினர். மறுபுறத்தில் நான்கு ராட்சத மோட்டார் மூலம் கால்வாயில் உள்ள தண்ணீரை தொடர்ந்து வெளியேற்றினர். இந்த நிலையில் நேற்று விடியற்காலை 4 மணி அளவில் வடிகால்வாயினுள் இருந்த சாய்ராம் உடல் மறுபக்கத்திற்கு மிதந்து வந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், சாய்ராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சாய்ராமின் நண்பரான நவீன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Velachery ,Sairam ,4th Street, Mayilai Balaji Nagar, Pallikaranai ,Naveen Kumar ,S. Kolathur ,Kovilambakkam ,
× RELATED சட்டமன்ற தேர்தலையொட்டி 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்