×

சட்டமன்ற தேர்தலையொட்டி 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

செங்கல்பட்டு, ஏப்.10: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடந்த தேர்தல் நுண் பார்வையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாலதி ஹெலன் பங்கேற்று அறிவுரை வழங்கினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டாம் கட்டமாக இந்திய தேர்தல் ஆணைய இணைய செயலியின் மூலம் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், இந்த மாதம் 23ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நுண் பார்வையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாக்குசாவடி மையங்களில் என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமென்றும், வாக்காளர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும், பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, மதுராந்தகம் வட்டம், பாக்கம் ஊராட்சியில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்பாடு செய்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கலெக்டர் முன்னிலையில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது கலெக்டர் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளிடம் நமது மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவினை ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு தெவித்தார். மேலும், மதுராந்தகம் வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை துறை மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் கலந்துகொண்டார்.

பின்னர், செய்யூர் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடமான மதுராந்தகம் சுபம் கல்லூரியினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர், துறை சார்ந்த அலுவலர்கள் கல்லூரி நிர்வாகத்தினரிடம் வாக்கு எண்ணும் மையத்தினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டுமென்றும், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கும் அரசியல் கட்சி முகவர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். மேலும், காவல் துறையினரிடம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுமாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில் தேர்தல் பொது பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள், செய்யூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சவுரப் கஹர்வார், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், மதுராந்தகம் தேர்தல் நடத்தும் அலுவலர் நரேந்திரன், செய்யூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடாசலம், இணை இயக்குநர் (வேளாண்மை) பிரேம் சாந்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜேஸ்வரி, துணை கலெக்டர் (பயிற்சி) மணியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chengalpattu ,District Election Officer ,Malathi Helen ,Chengalpattu District Collector’s Office ,
× RELATED வாலாஜாபாத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் அலுவலகம்