×

எடப்பாடிக்கு எதிராக நின்று ஓடியவர் அதிமுக கஸ்டடியில் தவெக வேட்பாளர்: பரபரப்பு தகவல்

சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் அருண்குமார். இவர் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய குழு உறுப்பினராக இருந்தார். மேலும் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் இணைச்செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் விஜய்யின் த.வெ.கவில் இணைந்தார். ஏற்காடு தொகுதியை சேர்ந்த இவர், எந்த தொடர்பும் இல்லாத இடைப்பாடி தொகுதி த.வெ.க.வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் கடும் அதிர்ச்சிwயடைந்தனர்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் யாருடனும் வேட்பாளர் அருண்குமார் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. மாவட்ட செயலாளர் விவரத்தை கேட்டும் அவர் சரியான பதிலை தரவில்லை. ஆனால் அருண்குமாரும், மாற்றுவேட்பாளரான அவரது மனைவியும் தாக்கல் செய்த வேட்புமனு முழுமையாக நிரப்பாமல், வேண்டும் என்றே விட்டுள்ளனர். வேட்புமனு பரிசீலனையில் இருவரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

முன்னதாக கழிவறைக்கு செல்வதாக கூறி சென்ற அருண்குமார் திரும்பி வரவே இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் வேட்பாளர் அருண்குமாரை கடத்தி சென்றுவிட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அருண்குமாருக்கு சீட் கொடுக்க பரிந்துரை செய்த, சேலம் தெற்கு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏவான வெங்கடாசலம் சம்பவ இடம் விரைந்து சென்றார். ஆனால் அவரிடம் வாக்குவாதம் செய்த தொண்டர்கள் அவரை அடிக்கவும் பாய்ந்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

பின்னர் இடைப்பாடி போலீஸ் ஸ்டேசனில், வேட்பாளரை யாரோ கடத்தி சென்றுவிட்டனர், அவரை கண்டுபிடித்து தருமாறு தொண்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் பரிசீலனையின்போது கழிவறைக்கு செல்வதாக கூறி சென்ற வேட்பாளர் அருண்குமார் இன்னும் வீடுபோய் சேரவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. உண்மையாகவே அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற சந்தேகமும் இருக்கிறது. அவரது வீடு பூட்டியே இருக்கிறது. அவரது மனைவியும் மாயமாகி உள்ளார்.

அதே நேரத்தில் அருண்குமார், அதிமுகவில் இருந்து வந்ததால் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவரை ஏற்காடு தொகுதியை சேர்ந்த அதிமுக முக்கிய பிரமுகர் பாதுகாப்பில் வைத்துள்ளது தெரியவந்துள்ளது. தவெக தொண்டர்கள் கடும் கோபத்தில் இருப்பதால், அவரை மறைத்து வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘இடைப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தவெக போட்டியிட கூடாது என சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

இதனால் திட்டமிட்டே அவரை தவெகவில் இணைய வைத்து சீட் பெற்றுகொடுத்துள்ளனர். அவர்களின் திட்டப்படியே எல்லாம் முடிந்துள்ளது. அன்று மட்டும் தொண்டர்கள் கையில் வேட்பாளர் சிக்கியிருந்தால் சட்னியாக்கி இருப்பார்கள். தற்போது அவரை அதிமுக முக்கிய நிர்வாகிகள் மறைத்து வைத்துள்ளனர். தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அவர் வெளியே வருவார்,’’ என்றனர்.

இதற்கிடையில் வேட்பாளர் அருண்குமார் திட்டமிட்டே வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்தாரா? இதற்காக அவர் பெரும் ெதாகையை கையூட்டாக வாங்கியதாக கூறப்படுவது உண்மைதானா? அல்லது அவரை யாராவது கட்டாயப்படுத்தினார்களா? எங்கே இருக்கிறார்? என்ற கேள்வியோடு அவரது செல்போனில் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் முடியாமல் போனது.

Tags : Edappadi ,AIADMK ,Arun Kumar ,Salem ,Ayodhyapatnam Union Committee ,AIADMK Youth and Girls Camp ,Vijay ,
× RELATED பல்லாவரம் சட்டமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு..!