×

கொள்கையை ஓரங்கட்டிவிட்டு ‘யூ டர்ன்’ அரசியல் கட்சியாகிறதா இந்து முன்னணி? கொந்தளிக்கும் பாஜ நிர்வாகிகள்

இந்து முன்னணி என்பது அரசியல் கட்சியல்ல, அது ஒரு சமுதாய பேரியக்கம் என அந்த இயக்கத்தின் நிறுவனர் ராமகோபாலன் கூறி இருக்கிறார். ஆனால் நடப்பு தேர்தல் களம் இந்த தாரக மந்திரத்தையே தலைகீழாக மாற்றியிருக்கிறது. இதற்கு காரணம் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் மகன் போட்டியிடுகிறார்.

இதனால் அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் அப்படியே யூ-டர்ன் அடித்துள்ளன. ஆன்மிகப் பணி, சமுதாயப் பணி என்று முழங்கிய நிர்வாகிகள் தற்போது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அரசியல் கட்சிகளில் தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பதுபோல, இயக்கத்தின் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளுக்குத் தொகுதி வாரியாக தேர்தல் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், தனது மகன் போட்டியிடும் திருப்பூர் தெற்கு தொகுதியின் அடிப்படைப் பிரச்னைகள் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்களைப் பட்டியலிட்டார். சமுதாய இயக்கமாக இருந்த ஒரு அமைப்பு, குறிப்பிட்ட ஒரு தொகுதியின் உள்ளூர் பிரச்னைகளை முன்வைத்து ஒரு கட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்வது, அது முழுமையான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்த இயக்கத்தின் நிறுவனரான ராமகோபாலன் கடந்த 2011 மற்றும் 2016 ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் எந்த அமைப்புக்கும், கட்சிக்கும் எங்கள் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தவர். வழக்கமாக பாஜவின் வாக்கு வங்கியாகக் கருதப்படும் இந்து முன்னணி, இப்போது திருப்பூரில் தன் சொந்த பலத்தைக் காட்டத் துடிப்பது தமிழ்நாடு பாஜவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக திருப்பூர் தெற்கு தேர்தல் பணிகளில் பாஜவினரை புறந்தள்ளி இந்து முன்னணி அமைப்பினர் முன்னெடுத்து செல்வது அவர்களுக்குள் மனக்குமுறலை ஏற்படுத்தி வருகிறது. வேட்பாளர் அறிமுகத்திற்கு பிறகு பாஜவின் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்ட மேடையை இந்து முன்னனி அமைப்பினரே நிரப்புவது பாஜ நிர்வாகிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Hindu Front ,Turbulent Bajaj ,Ramakopalan ,CURRENT ELECTORAL FIELD ,Tiruppur South Legislature ,
× RELATED பல்லாவரம் சட்டமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு..!