×

பாஜ வேட்பாளர வின் பண்ண வச்சா நீங்க சொல்றத பண்றேன்… ஒன்றிய அமைச்சர் மிரட்டல்

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 27 தொகுதிகளில் பாஜ வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஒன்றிய அமைச்சர்கள் பலரும் தொகுதி வாரியாக வலம் வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு வந்துள்ளார். அவர் வட மாநில வர்த்தகர்கள், பிற மொழி பேசும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கோரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தாராபுரம் சாலையில் உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றிய அமைச்சரிடம் வெளி மாநில வர்த்தகர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக பண்டிகை காலம் மற்றும் விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல போதுமான ரயில் வசதி இல்லை என குறிப்பிட்டனர். அதனை கேட்டுக்கொண்ட ஒன்றிய அமைச்சர், ‘‘உங்கள் கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

அதே நேரத்தில் திருப்பூர் தெற்கு தொகுதியில் பாஜ வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால் மட்டுமே உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் பரிந்துரை செய்வேன்’’ என கறாராக தெரிவித்தார்.  பிரசாரத்திற்காக வந்த ஒன்றிய அமைச்சர் தொழிற்துறையினரிடம் ஒன்றிய அரசின் சாதனைகள் பற்றி எடுத்துக் கூறாமல் பாட்டு கச்சேரிக்கு வந்ததுபோல் சாமி பாடல்களையும், இந்தி பாடல்களையும் பாடினார்.

என்டிஏ கூட்டணியை ஆதரித்து அவர் எழுதிய பாடலையும் பாடியபடி இருந்தார். இதனால் வந்திருந்த தொழிற்துறையினர், வர்த்தகர்கள் மட்டுமல்லாது இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பாஜ மற்றும் இந்து முன்னணியினர் இதென்ன தேர்தல் பிரசாரமா? பாட்டுக் கச்சேரியா? எனக்கூறி குழப்பம் அடைந்தனர்.‌

Tags : BJP ,Union ,Tamil Nadu ,National Democratic Alliance ,Union Law Minister ,Arjun Ram Meghwal ,Tiruppur South ,
× RELATED சிறையில் இருந்த போது எனக்கு...