×

ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஈரான் அதிபரிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ள ஜப்பான்.!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சி (Sanae Takaichi) வரவேற்றுள்ளார். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் சுமார் 25 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடிய ஜப்பான் பிரதமர், மத்திய கிழக்கில் பதற்றத்தை தணிக்கவும் ஹோர்மோஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தினார்.

ஜப்பான் தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவீதத்தை மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்தே பெறுகிறது. இந்நிலையில் தற்போதைய போர் சூழலால் கணிசமாக பொருளாதார பாதிப்புகளை சந்தித்துள்ள ஜப்பான், ராஜதந்திர ரீதியில் விரைவில் ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பையும் ஈரான் அதிபரிடம் வெளிப்படுத்தி உள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை, ஒரு நேர்மறையான முன்னேற்றமாக தாம் கருதுவதாக ஜப்பான் பிரதமர், ஈரான் தரப்பிடம் குறிப்பிட்டு உள்ளார். ஹோர்முஸ் நீரிணையானது உலகளாவிய சரக்கு போக்குவரத்திற்கு ஒரு முக்கிய வழித்தடமாகவும், ஓர் சர்வதேசப் பொது சொத்தாகவும் திகழ்கிறது என்பதை ஈரான் அதிபரிடம் சனே டகாயிச்சி வலியுறுத்திக் கூறினார். ஜப்பானுடன் தொடர்புடைய கப்பல்கள் உட்பட, அனைத்து நாடுகளின் கப்பல்களும் பாதுகாப்பாகப் பயணிப்பதை இயன்றவரை விரைவாக உறுதி செய்யுமாறு அவர் ஈரான் அதிபரிடம் கேட்டு கொண்டுள்ளார்.

அதே போல ஈரான் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்து, சமீபத்திகள் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒரு ஜப்பானியக் குடிமகன் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். அந்த நபர் தற்போது பிணையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இப்பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வு காணப்பட வேண்டும் என்று ஈரான் அதிபரிடம் வலியுறுத்தினார். தற்போதைய சூழல் குறித்த ஈரானின் நிலைப்பாட்டைப் பெஸெஷ்கியான், டகாயிச்சியிடம் விளக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நாட்டு தலைவர்களும் தங்களுக்கு இடையிலான தொடர்புகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஒப்பு கொண்டனர். சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன், ஜப்பான் அரசாங்கம் ராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஜப்பான் பிரதமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.மேலும் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகள், கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பதற்றத்தைத் தணிப்பதிலும் எதிர்பார்க்கும் பலன்களை அளிக்கும் என்று செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். ஈரான் ஹோர்முஸ் நீரிணையைத் திறம்பட முற்றுகையிட்டுள்ளதால், பாரசீக வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் ஜப்பானியக் கப்பல்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறுவதை உறுதி செய்யும் வகையில் தங்களது ராஜதந்திர முயற்சிகளை முழுவீச்சில் முன்னெடுத்து வருதாகவும் குறிப்பிட்டார்.

Tags : Japan ,Strait of Hormuz ,Sanae Takaichi ,Iran ,United States ,Prime Minister of ,President ,Masood Beseshkian ,Middle East ,Strait of Hormos ,
× RELATED நான்கு மாதங்களில் 6 முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ள வடகொரியா.!!