×

சித்திரை விசுவை முன்னிட்டு பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கேரள பலாப்பழம் வரத்து துவங்கியது

 

பொள்ளாச்சி: சித்திரை விசுவை முன்னிட்டு பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கேரளாவில் இருந்து பலாப்பழம் வரத்து துவங்கி உள்ளது. பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் சீசனின்போது மாம்பழம், தர்பூசணி, பலாபழம், அன்னாசிபழம் மற்றும் கரும்பு உள்ளிட்டவை விற்பனைக்காக மொத்தமாக கொண்டு வரப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியிலிருந்து தர்பூசணி வரத்து அதிகமாக இருந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து லாரி மற்றும் வேன்களில் கொண்டு வந்த தர்பூசணிகளை வியாபாரிகள் மொத்த விலைக்கு வாங்கி சென்றனர். இதேபோல் சித்திரை விசு பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கேரளாவில் இருந்து பலாப்பழம் வரத்து துவங்கியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம், கொழிச்சாம்பாறை, சாலக்குடி, அங்கேஷ்வரி, கொரடி மற்றும் பாட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பலாப்பழம் வரத்துவங்கி உள்ளது.

காந்தி மார்க்கெட்டில் குவிந்துள்ள பலாப்பழங்களை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி உடுமலை, திருப்பூர், கோவை, பல்லடம், ஈரோடு மற்றும் வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் விற்பனைக்காக மொத்தமாக வாங்கி சென்றனர். இதனால், பலாப்பழத்துக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. கடந்த ஆண்டு அதிபட்ச விலையாக ஒரு பழம் சைஸ் வாரியாக ரூ.350 வரை விற்பனையானது. இந்த ஆண்டு குறைந்த பட்ச விலையாக சிறியது ரூ.150 முதல் அதிகபட்ச விலையாக ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை ஏற்றத்துடன் இருந்தாலும் வெளியூர் வியாபாரிகள் நேரில் வந்து பழங்களை அதிகளவு வாங்கி சென்றனர்.

இது குறித்து மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ‘‘வரும் 14ம் தேதி சித்திரை மாதம் முதல் தேதியை முன்னிட்டு பலாப்பழம் வரத்து துவங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பலாப்பழம் வந்தாலும், அதிகபட்சமாக கேரளாவில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விலை ஏற்றத்துடன் உள்ளது. சித்திரைவிசு நெருங்குவதால் விலை சற்று அதிகரித்துள்ளது’’ என்றனர்.

Tags : Pollachi ,Pollachi market ,Kerala ,Chithirai Vishu ,Pollachi Gandhi Market ,
× RELATED தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்...