நாகர்கோவில்: கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்க வேண்டும் என டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வருகிற 23ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் 9ம்தேதி வெளியாகிறது. தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில், நாளை மறுதினம் (9ம்தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிகிறது. இதையொட்டி கேரளாவையொட்டி உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பை அதிகரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் கேரளாவையொட்டி உள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே களியக்காவிளை, படந்தாலுமூடு, பனச்சமூடு, நெய்யாற்றின்கரை, பளுகல், கோழிவிளை, ஊரம்பு உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் உள்ளன.
இந்த சோதனை சாவடிகளில் தற்போது கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனை நடந்து வருகிறது. அங்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன், குமரி மாவட்ட தேர்தல் பணிக்காக கேரளாவில் இருந்து அரசியல் கட்சியினர் அதிகம் பேர் வர வாய்ப்பு உள்ளது. மேலும் கேரளாவில் தேர்தல் முடிந்ததால், அங்கு நடத்தை விதிமுறைகள் பெரிய அளவில் இருக்காது என்பதால், அங்கிருந்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் ரகசியமாக குமரி மாவட்டத்துக்குள் கொண்டு வரப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குமரி – கேரள எல்லையில் சோதனையை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது குமரி கேரளா எல்லை சோதனை சாவடிகளில் துணை ராணுவம் உதவியுடன் வாகனங்கள் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு கடத்தல் மற்றும் பண பட்டுவாடா ஆகியவை நடைபெறுகிறதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று களியக்காவிளை, கோழிவிளை, ஊரம்பு உள்ளிட்ட சோதனை சாவடிகளில் டிஐஜி சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்குள்ள போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த அவர், அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்ய வேண்டும். கார்கள், வேன்கள், லாரிகள், பார்சல் வாகனங்கள் அனைத்தும் முறையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது, டி.எஸ்.பி. நல்லசிவம் உடன் இருந்தார்.
