×

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் சுமார் 800 தாலிபான் பயங்கரவாதிகள் கொலை – பாக்., தகவல்

ஆப்கானிஸ்தானில் 800 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மற்றும் ஆயுத கிடங்குகள் போன்றவை தங்களின் வான்வழி தாக்குதல் மூலம் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளதாகவும் பாகிஸ்தான் தரப்பு தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதச் செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கையில் சுமார் 800 பயங்கரவாதிகளை கொன்றுள்ளதாக பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தகவல் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவம் சுமார் 800 பயங்கரவாதிகளை கொன்றதாகவும், 286 நிலைகளை அழித்து 44 நிலைகளைக் கைப்பற்றியதாகவும், மேலும் 249 டாங்கிகள், கவச வாகனங்கள், பீரங்கிகள் மற்றும் ட்ரோன்களை அழித்து, ஆப்கானிஸ்தான் முழுவதும் 81 இடங்களை தாக்கி இருப்பதாகவும் தாரார் தெரிவித்தார்.

தீவிரவாதிகளை இலக்காக கொண்டது என்று கூறினாலும் பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்களே கொல்லப்பட்டதாகக் கூறி, அதற்குப் பதிலடியாக ஆப்கானிஸ்தான், கடந்த பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தான் மீது எல்லை தாண்டித் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு தரப்பிற்கும் பிப்ரவரியில் சண்டை தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுடன் “வெளிப்படையான போரில்” ஈடுபடுவதாக பாகிஸ்தான் அறிவித்தது.

எனினும் சவூதி அரேபியா, துருக்கி மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தத்தை தொடர்ந்து, முஸ்லிம்களின் ஈத் அல்-ஃபித்ர் பண்டிகைக்கு முன்பு கடந்த மாதம் இரு தரப்பினரும் தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்தனர். இந்த போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மார்ச் 25 அன்று மீண்டும் இருநாடுகளுக்கும் இடையே சண்டை வெடித்தது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுடன் மேற்கு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் சீனா, நட்பு நாடுகளாக இருந்து எதிரிகளாக மாறி இருக்கும் இந்த இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய தொடர்ந்து முயன்று வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் உரும்கி நகரில் இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 

 

Tags : AFGHANISTAN ,PAK ,Pakistan ,
× RELATED இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்...