மயிலாப்பூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் களம் இறங்கி உள்ளார். தேர்தல் அரசியல் அவருக்கு ஒத்து வருவதில்லை. தலைவராக இருந்தாலும், ஆளுனராக இருந்தாலும் நியமன அரசியல்தான் அவருக்கு ஒத்து வருவதில்லை. அவர் தேர்தலில் போட்டியிட்டாலே தோல்வி தேவதை(?) அவரின் இணைபிரியா தோழியாகி விடுகிறார். ஆனாலும், அவர் தன் முயற்சியை கிஞ்சித்தும் கைவிடுவதில்லை. தமிழக பாஜக மாநிலத் தலைவராக கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தமிழிசை நியமிக்கப்பட்டார். அவர் தலைவர் பொறுப்பில் இருந்த காலத்தில் தமிழக பாஜக தலா ஒரு மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தது.
அவர் இரண்டு பேரவைத் தேர்தல்களிலும், இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் போட்டியிட்டார். 2006-இல் சென்னை வேளச்சேரி தொகுதியிலும், 2011-இல் ராதாபுரம் தொகுதியிலும், 2009-இல் வடசென்னை மக்களவைத் தொகுதியிலும், 2019-இல் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியிலும், 2024 தென்சென்னை மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால், ஐந்து தேர்தல்களிலும் அவருக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. அதிகபட்சமாக 2019 மற்றும் 2024 தேர்தலில்தான் அவருக்கு இரட்டை இலக்க ஓட்டு சதவீதம் கிடைத்தது.
மற்ற தேர்தல்களில் எல்லாம் ஒற்றை இலக்கத்திலேயே வாக்கு சதவீதம் இருந்தது. ஆளுநராக இருந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு தீவிர அரசியலில் குதித்து எம்பி தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சராகலாம் என்ற அவரது கனவு பலிக்காமலே போய்விட்டது. தற்போது மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் அவர் களமிறங்கி உள்ளார். இப்போதும் அவருக்கு தோல்விதான் பரிசாக கிடைக்குமா? விடை மே 4ம் தேதி தெரிந்துவிடும்.
