திண்டிவனம்: திமுக கூட்டணியில் விசிக சார்பில் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் வன்னி அரசு போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: அதிமுகவைப் பொறுத்தவரை தேர்தல் ஆதாயம்தான் பெரிதாக இருக்கிறது. பாஜ வளருவதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அந்த பாஜ பிற மாநிலங்களில் எப்படி இயங்கி வருகிறது என்பதை உணர்ந்ததாக தெரியவில்லை.
எந்தக் கூட்டணியில் பாஜ இருக்கிறதோ அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளைத்தான் முதலில் அது கபளீகரம் செய்யும், உதாரணத்திற்கு பாண்டிச்சேரி ஒரு சான்று. தமிழ்நாட்டில் இப்போது 27 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா போன்ற கட்சிகளையும், புதிய நீதிக் கட்சி போன்ற கட்சிகளையும் கூட தாமரைச் சின்னத்திலேயே போட்டியிட வைக்கிறார்கள் கிட்டத்தட்ட 35 தொகுதிகளுக்கு மேலாக தாமரைச் சின்னத்திலேயே தமிழ்நாட்டில் போட்டியிடக் கூடிய அளவுக்கு பாஜகவுக்கு இடம்கொடுத்தது யார்?, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது யார்?. ஜெயலலிதா இருந்தால் இதைச் செய்திருப்பாரா?.
மோடியா லேடியா மோதி பார்க்கலாம் என்று கேட்டார். அதுமட்டுமில்லாமல் என் வாழ்க்கையில் நான் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டேன், பாஜகவோடு கூட்டணி வைத்துவிட்டேன், இனி எந்தக் காலத்திலும் பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளாது என்று சொன்னவர் ஜெயலலிதா அம்மையார். ஆனால் ஜெயலலிதா அம்மையாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு அரசியலிலே நிற்கிற அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி பாஜகவைத் தோளில் தூக்கிச் சுமக்கிறார். மதவெறியைத் தூண்டுகிற கட்சி, சாதிவெறியைத் தூண்டுகிற கட்சி, வெறுப்பு அரசியலை விதைக்கிற கட்சி அது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இரும்புப் பிடியாகப் பிடித்து நிற்கிறது வெறும் சீட்டுகளுக்காக அல்ல, பதவிக்காக அல்ல. இந்தக் கூட்டணியின் பாதுகாப்பு முக்கியம் என்று கருதுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
