×

தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 280 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வேலூர் மாவட்டத்தில்

வேலூர், ஏப்.1: தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பில் பங்ேகற்காத அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் 280 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. வாக்குப்பதிவுக்கான வாக்குச்சாவடி மையங்கள், அதற்கான சிறப்பு முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்தும் வேகமாக செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் பல்வேறு துறைகளில் இருந்தும் தேர்தல் பணியில் ஈடுபடும் வகையில் அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம்(தனி), குடியாத்தம்(தனி) என்று 5 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 11 லட்சத்து 33 ஆயிரத்து 587 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இவர்களுக்காக மாவட்டத்தில் 676 பள்ளிகள் மற்றும் கட்டிடங்களில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் 268 வாக்குச்சாவடி மையங்களும், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 280 வாக்குச்சாவடி மையங்களும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 295 வாக்குச்சாவடி மையங்களும், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் 265 வாக்குச்சாவடி மையங்களும், குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 319 வாக்குச்சாவடி மையங்களும் என மாவட்டம் முழுவதும் 1,427 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1,711 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,711 கட்டுப்பாட்டு கருவிகள், 1,853 விவிபேடு கருவிகள் ஆகியன தொகுதிவாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றுவதற்காக 6 ஆயிரத்து 848 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேர்தல் தொடர்பான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 5 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 28ம் தேதி நடத்தப்பட்டது. 144 மண்டல அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்ட இப்பயிற்சியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் 280 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பங்கேற்கவில்லை. இவர்கள் அனைவருக்கும் 17ஏ பிரிவின் கீழ் உரிய விளக்கம்கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய பதிலை உரிய ஆவணங்களுடன் அவர்கள் அளித்த பின்னர், வேறொரு நாளில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். விளக்கம் அளிக்காமல் தவிர்ப்பவர்களுக்கு துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Vellore ,Tamil Nadu Assembly ,
× RELATED கே.வி.குப்பம் வாரச்சந்தையில் ஆடுகளின் விற்பனை மந்தம்