துபாய்: ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் ஐந்தாவது வாரமாக தடையின்றி தொடர்கின்றது. ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் இறுக்கமான பிடியைக் குறித்து பேசுவதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூடுவதற்கு தயாராகி உள்ளது. ஈரானின் ராணுவ திறன்கள் ஏறக்குறைய அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்காவும் இஸ் ரேலும் கூறி வருகின்றன. எனினும் ஈரான் அதன் அண்டையில் உள்ள வளைகுடா அரபு நாடுகள் மீது தொடர்ந்து அழுத்தத்தை அதிரிகத்து வருகின்றது. நேற்று அதிகாலை குவைத் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த டிரோன் மினா அல் அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியது. போரின்போது இந்த சுத்திகரிப்பு ஆலையானது பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. நேற்றைய தாக்குதலின்போது பல இடங்களில் தீப்பற்றியுள்ளதால் தீயணைப்புத் துறை வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பஹ்ரைனிலும் ஈரான் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. சவுதி அரேபியாவில் ஈரானால் ஏவப்பட்ட டிரோன்கள் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டன. இந்நிலையில் உங்கள் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பு அனைத்தையும் நாங்கள் அழிப்போம் என்று ஈரான் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிவாயு தளங்கள் மீது தாக்குதலை நடத்துவதற்கு குறிவைத்துள்ளது. இதேபோல் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் மத்திய நகரமான இஸ்பாஹானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் என்ன தாக்கப்பட்டது என்பது குறித்த உடனடி தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. ஈரான் அரசு தொலைக்கட்சியில், தென்மேற்கு ஈரான் மீது பறந்த அமெரிக்க போர் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த விமானி சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. ஒரு லாரியில் அமெரிக்க போர் விமானத்தின் சிதைந்த பாகங்களை ஏற்றிச்செல்லும் காட்சியை தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இது போரை மேலும் தீவிரப்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
* ஹார்முஸ் ஜலசந்தியை கண்காணிக்க முன்மொழிவு
ஹார்முஸ் ஜலசந்தியை கண்காணிப்பதற்கு ஓமன் நாட்டுடன் இணைந்து ஒரு முன்மொழிவை உருவாக்கி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த முன்மொழிவு இந்த வழித்தடம் வழியாக செல்லும் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை எளிதாக்கவும் உறுதி செய்யவும், அவற்றுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதையும் நோக்கமாக கொண்டதாகும். இந்த முன்மொழிவின் உண்மையான அர்த்தம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. ஓமன் நாடும் இது குறித்து உடனடியாக எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை.
* கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்
ஈரான் குவைத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதான தாக்குதலை தொடர்ந்து கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியுள்ளது. இதனால் ஆலையின் சில பாகங்களில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. கடல்நீர் சுத்திகரிப்பானது வளைகுடா அரபு நாடுகள் மற்றும் ஈரானுக்கு தேவையான பெரும்பாலான நீரை வழங்குகின்றது. கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இந்த போரில் முக்கிய இலக்காக மாறியுள்ளன. கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை அந்த நாடுகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கே அச்சுறுத்தலாக கருதுகின்றன.
* தொடரும் உயிரிழப்புகள்
போரின் காரணமாக ஈரானில் 1900க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வளைகுடா நாடுகளிலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையிலும் இருபதுக்கும் மேற்பட்டோர் போரினால் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
* 12வயது சிறுவர்கள் சேர்ப்பு
ஈரான் புரட்சிக்கரப் பாதுகாப்பு படையின் முற்றிலும் தன்னார்வ தொண்டர்களை கொண்ட பசிஜ் படையின் சோதனை சாவடிகள் மற்றும் ரோந்து பணிகளில் 12வயது சிறுவர் வீரர்கள் ஆட்சேர்ப்பு செய்வதாக சர்வதேச அரசு சாரா அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. 12 வயது சிறுவர்களை ஆட்சேர்ப்பு செய்வது போர்க்குற்றம் என்றும் எச்சரித்துள்ளது.
* பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை
ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை அமெரிக்கா ஈரானிடம் முன்வைத்தது. எனினும் இந்த ராஜதந்திர முயற்சியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. டிரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்த கடந்த இரண்டு முறையும் தற்போது போரை தொடங்குவதற்கு வழி வகுத்த சூழல் உட்பட அமெரிக்கா தங்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஈரான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றது. இதன் காரணமாக பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
