மேட்டூர், ஏப். 3: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.41 அடியாக சரிந்துள்ளது. நீர்மட்டம் குறைந்த நிலையில், அணையின் தாங்கு சுவர் உறுதியாக உள்ளதா? என்பதை, திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவகுமார் நேற்று விசை படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலதுகரை, இடதுகரை பகுதிகளிலும் ஆய்வு செய்தார். மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் அவர் பார்வையிட்டார். இப்பணிகளை பருவமழைக்கு முன்பாக விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, பருவமழைக்கு முன்பாக அணையின் உட்புறத்தில் செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வு பணி சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. ஆய்வின் போது, நீர்வளத்துறை செயற் பொறியாளர் வெங்கடாஜலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
