வேலூர், மார்ச் 31: வேலூரில் தவெக ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றதால், அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி, வரும் 6ம் தேதி நிறைவடைகிறது. வேலூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் வேலூர் வேலப்பாடியில் உள்ள வேலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. வேலூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வினோத்கண்ணன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய, வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து ஊர்வலமாக சென்றார்.
அதேசமயம் திருப்பதி தேவஸ்தானம் அருகே கால்வாய் சீரமைப்பு பணி நடந்ததால் தொரப்பாடி செல்லும் சாலை மூடப்பட்டது. இதனால் வேலூர் – ஆரணி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆரணி சாலை, அண்ணா சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நேற்று பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மேல் போக்குவரத்து சீரானதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். நகரின் முக்கிய பகுதிகளில் ஊர்வலம் செல்ல தடைவிதிக்க வேண்டும். அப்படியே சென்றாலும் ஒற்றை வரிசையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
