×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உருவானது எப்படி?

இந்தியாவில் ஜனநாயக கடமையாக கருதப்படும் தேர்தலில் பல்வேறு வளர்சிச நிகழ்ந்து வருகிறது. அதன்படி கடந்த 74 ஆண்டுகளில் வாக்குப்பதிவு முறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.1996ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற அத்தனை சட்டமன்ற பொதுத் தேர்தல்களிலும் ஸ்வஸ்திக் குறியீட்டு முத்திரை முறையில் வாக்குச்சீட்டில் வாக்களிக்கும் முறை அமலில் இருந்தது. இந்த வாக்குச்சீட்டு முறையினால் காலதாமதம், முறைகேடுகள் ஏற்பட்டது.

அப்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.எல்.ஷாக்தர், இதற்கான ஆய்வை 1977ல் தீவிரப்படுத்தினார். ஐதராபாத்தில் உள்ள இந்திய மின்னணுவியல் கழகம் 1979ல் இவிஎம் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திர மாதிரியை தயாரித்தது. இதன் மேம்பட்ட வடிவத்தை பம்பாய் ஐஐடி பேராசிரியர்கள் ஏ.ஜி.ராவ், ரவி பூவய்யா இருவரும் இணைந்து உருவாக்கினர். பெல் நிறுவனத்தின் தொழிலாளர் சங்க தேர்தலுக்கு அவர்கள் வடிவமைத்துக் கொடுத்த இயந்திரம் இதுவே. பெல் நிறுவன தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில்தான் முதன்முதலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

கட்டுப்பாட்டு அலகு, வாக்குப்பதிவு அலகு என இரண்டு பகுதிகளைக் கொண்டது வாக்குப்பதிவு இயந்திரம். வேட்பாளரின் பெயர், சின்னம், பொத்தான்களுடன் கூடியது வாக்குப்பதிவு அலகு. கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாக்குகள் பதிவு செய்ய முடியும் என்பதால் கள்ள ஓட்டு செலுத்துவது கடினம். செல்லாத வாக்கு என்கிற குளறுபடிக்கும் இதில் இடமில்லை.

அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் காகித வாக்குக்கு மாற்றாக இதை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. இப்படி நிறைய சாதகங்கள் இருக்கவே, தேர்தல் ஆணையம் இவிஎம்மை பயன்படுத்த முடிவெடுத்தது. மக்களவைத் தேர்தல், மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கு மட்டும் இவிஎம் மூலம் வாக்குப்பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. கேரளத்தின் பரவூர் தொகுதியில் 1982ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதன்முதலில் இவிஎம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,Tamil Nadu ,
× RELATED சென்னை கொளத்தூர் தொகுதியில்...