×

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 6 பேர் வேட்பு மனு தாக்கல்

 

பெரம்பலூர்,மார்ச் 31: பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் முதல்நாள் வேட்பு மனுத்தாக்கல். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 4-பேர், சுயேட்சைகள் 2- பேர் என மொத்தம் 6 பேர் மனு தாக்கல் செய்தனர். திருவண்ணா மலை கலெக்டரின் சகோதரர் சுயேட்சையாக மனுத்தாக்கல்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி, வருகிற ஏப்ரல் 6ஆம்தேதி முடிவடைய உள்ளது. இதில், மார்ச்-30, ஏப்ரல்-2,4,6 ஆகிய 4 வேலை நாட்களிலும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை காலை 11 மணிமுதல் மதியம் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஏப்ரல் 9ஆம்தேதி வேட்பு மனுக்கள் திரும்பப் பெறும் நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி)சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல்நடத்தும் அலுவலரான, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், குன்னம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், குன்னம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் குன்னம் தாலுக்கா அலுவலகத்திலும் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனுத்தாக்கல் செய்வதற்கான முதல் நாளாளர் நேற்று பெரம்பலூர் (தனி) தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் நகராட்சி, துறைமங்கலம், நியூகாலனி பகுதியைச் சேர்ந்த ஜான்சி ராணி(43), லாடபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த கவிதா (33) ஆகிய இருவரும், சுயேச்சை வேட்பாளர்களாக பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, வயலப்பாடி, கீரனூரை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரும், பெரம்பலூர் நகராட்சி, துறைமங்கலம், அவ்வையார் தெருவைச் சேர்ந்த புனித்ராஜ் என்பவரும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல்நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் அனிதா என்பவரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் சுயேட்சை வேட்பாளரான புனித்ராஜ் என்பவர் தற்போது திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வரும் தர்ப்பகராஜின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.

குன்னம் சட்டமன்ற தொகுதி
குன்னம் சட்டமன்ற தொகுதியில் முதல் நாளான நேற்று, நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் நகராட்சி, அன்பு நகரைச் சேர்ந்த ராமர் மகன் கீர்த்தி வாசன்(27) என்பவரும், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, சிறுகுடல் கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராமர் என்பவரும் குன்னம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான, பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் என்பவரிடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் வேட்பாளர் ராமரின் மகன் தான் மற்றொரு வேட்பாளரான கீர்த்திவாசன் ஆவார். வேட்பு மனு தாக்கல் நடைபெற்றதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி முனைவர் கி. பிரபாகர் உத்தரவின் பேரில் டிஎஸ்பிக்கள் (பெரம்பலூர்) ரவிச்சந்திரன், (மங்கலமேடு) ஆனந்தி ஆகியோர் தலைமையில் 120 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 

Tags : Perambalur ,Kunnam ,Naam Tamilar Party ,Thiruvannamalai Collector ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்