×

பெரம்பலூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

 

பெரம்பலூர்,மார்ச் 29: வேட்பு மனுதாக்கல் நாளை (30ம்தேதி) தொடங்குகிறது. இதற்காக பெரம்பலூர். குன்னம் சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் முன்பு 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 120 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் ஏற்பாடு செய்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (30ம்தேதி) தொடங்கி, வருகிற ஏப்ரல் 6-ஆம்தேதி முடிவடைய உள்ளது. இதில், மார்ச்-30, ஏப்ரல்-2,4,6 ஆகிய நான்கு வேலை நாட்களிலும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

இதற்காக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மார்ச்-31, ஏப்ரல்-1, 3, 5 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும். ஏப்ரல் 7ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஏப்ரல் 9ஆம்தேதி வேட்பு மனுக்கள் திரும்பப்பெறும் நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், குன்னம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்,

குன்னம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் குன்னம் தாலுகா அலுவலகத்திலும் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவை வேட்பாளரோ அல்லது அவரை முன்மொழிபவர்களோ தாக்கல் செய்யலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அஞ்சல் வழியாகவோ, வேறு தனிநபர் மூலமாகவோ அனுப்பக்கூடாது. வேட்பு மனுத் தாக்கலுக்கு வேட்பாளர்கள் வரும் போது 100 மீ. சுற்றளவிற்குள் மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் வேட்பாளருடன் நான்கு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

வேட்புமனுத் தாக்கலின் இறுதி நாளான ஏப்ரல் 6ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வந்தால் அவர்களுக்கு கடைசியில் வந்த நபர்களிடம் இருந்து டோக்கன்கள் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் (தேசிய அளவில் மற்றும் சம்மந்தப்பட்ட மாநில அளவில்) வேட்பாளராக இருந்தால் ஒரு நபர் மட்டும் முன்மொழிந்தால் போதுமானது. மேற்படி வேட்பாளரை முன்மொழியும் நபர்கள் அதே சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு வேட்பாளர் அதிகப்பட்சம் 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் இரண்டு சட்ட மன்றத் தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது.

வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் (Reserved Symbols) கோரும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கட்சியின் அங்கீகாரம் பெற்ற நபரிடமிருந்து படிவம்-ஏ, படிவம்-பி (Form-A, Form-B) ஆகிய படிவங்கள் அரசியல் கட்சித் தலைவரின் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அவை அசலாக இருக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுப் பிரிவினர் ரூ10,000-ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.5,000ம் வைப்பீட்டுத் தொகையாக (டெபாசிட்) செலுத்த வேண்டும். மேற்படி வைப்பீட்டுத் தொகையை ரொக்கமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

வேட்பாளர் பிற சட்டமன்றத் தொகுதி வாக்காளராக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலரிடம் (ERO) பெற்ற சான்று இருக்க வேண்டும். இதுபோன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள அனைத்து விதி முறைகளையும் முறையாகப் பின்பற்றி வேட்புமனு தாக்கல் செய்திட வேண்டும். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற உள்ள பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், குன்னம் தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் வேட்புமனு தாக்கலையொட்டி பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் உத்தரவின் பேரில்,

பெரம்பலூர் (உட்கோட்டம்) டிஎஸ்பி ரவிச்சந்திரன், மங்களமேடு (உட்கோட்டம்) டிஎஸ்பி ஆனந்தி ஆகியோர் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் (பெரம்பலூர்) பிரபு, (குன்னம்) கண்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஏட்டுகள் உள்ளிட்ட போலீசார், எல்லையோர காவல் படையினர், பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசார் உள்ளிட்ட 120 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Tags : Perambalur ,Kunnam Assembly ,Perambalur District ,SP ,Prabhakar… ,
× RELATED தா.பழூர் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா