- அரியலூர்
- மாவட்ட தேர்தல் அதிகாரி
- மாவட்ட கலெக்டர்
- ரத்தின சாமி
- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026
- அரியலூர் சட்டமன்றத் தொகுதி…
அரியலூர், மார்ச் 29: அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில், வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குப்பதிவு தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் தாம் பதிவுசெய்த வாக்கினை சரிபார்க்கும் கருவி விவிபேட் ஆகியவற்றை பயன்படுத்துவது குறித்த முதற்கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் அலுவலர்களுக்கான மருத்துவ முகாம்களையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு 23.4.2026 அன்று நடைபெறவுள்ளதை தொடர்ந்து, அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும்,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் தாம் பதிவுசெய்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளை (விவிபேட்) பயன்படுத்துவது குறித்தும், வாக்குப்பதிவு பணிகள் குறித்து கணினி வழி (MS Powerpoint) பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கையேடுகளும் வழங்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் அஞ்சல் வாக்களிப்பது தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டது.இந்த பயிற்சி வகுப்புகளில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1582 வாக்குப்பதிவு மைய அலுவலர்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1487 வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் தேன்ராஜ், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மனோகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சித்ரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகோபால், வட்டாட்சியர்கள், மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
