நடிகர் விஜய் தனது கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து களமிறங்கியுள்ள சூழலில், அதற்குப் போட்டியாக அஜித் ரசிகர்கள் திருப்பூர் போன்ற முக்கிய நகரங்களில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக வேட்புமனுக்களை பெற்றுச் செல்வது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் அஜித் ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டதோடு, தமக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும், ரசிகர்கள் தத்தமது வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பலமுறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தற்போது விஜய் முழுநேர அரசியலில் இறங்கியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை கிண்டல், கேலி செய்வதும், வம்புக்கு இழுப்பதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராகத் தங்களது பலத்தை நிரூபிக்க அஜித் ரசிகர்கள் தேர்தல் களத்தை சாதகமாக பயன்படுத்த முயற்சி மேற்கொள்கின்றனர். அஜித்தின் நேரடி ஆதரவோ அல்லது அதிகாரப்பூர்வ இயக்கமோ இல்லாத நிலையிலும் நடிகர் விஜய்யின் தவெகவுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தேர்தல் களத்தில் நிற்கப் போவதாக தெரிவிக்கின்றனர்.
திருப்பூரில் விருப்ப மனு பெற்றுச்சென்ற அஜித் ரசிகர் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த ராசுகுட்டி கூறுகையில், ‘‘விஜய் ரசிகர்களின் சில செயல்பாடுகளால் தமிழ்நாடு முழுவதும் அஜித் ரசிகர்கள் தேர்தல் களம் காண தயாராகி வருகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பகுதியிலும் வேட்பு மனுக்களை வாங்கி செல்கின்றனர். ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுடன் கலந்து பேசி விரைவில் வேட்பு மனு தாக்கல் செய்து அரசியல் களம் காண உள்ளோம்’’ என்றனர்.
