விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பள்ளியில் ஐஸ்கிரீம் சாப்பிடும் குழந்தைகள் போல் நடிகர் விஜய் விளையாட்டுத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார். ஊர் உலகத்தில் நாட்டு நடப்பில் என்ன நடக்கிறது என்பது விஜய்க்கு தெரியவில்லை. விஜய் பேசும் வார்த்தைகளில் நிறைய விளையாட்டுத்தனம் உள்ளது. அவர் சினிமாவில் காமெடி நடிகராகவோ, ஆக்சன் நடிகராகவோ நடிக்கலாம். ஆனால் அரசியலில் அவரது நடிப்பு எடுபடாது. அவரை ஒரு வேடிக்கை பொருளாக வாக்காளர்களும், பொதுமக்களும், அரசியல் ஆர்வலர்களும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
விஜய் பேசி வருவது அவரை ஒரு நல்ல எதிர்கால அரசியல் தலைவராக உருவாக்கக் கூடிய பேச்சாக இல்லை. உலகத்துக்கே தெரியும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தான் போட்டி என்பது. தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பதுதான் பேசுபொருள். இதனிடையே நான்தான், நான்தான், நான்தான் என கூறி வரும் விஜய்யை, ஒரு சிரிப்பு நடிகராகத்தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள். அரசியலில் ஒரு ஜோக்கராக பார்க்கிறார்கள். விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது அவருக்கே தன்னம்பிக்கை இல்லாததை காட்டுகிறது.
நடிகர் விஜய் தனது பெயரையே சொல்லிக் கொண்டு வருவதை ஜாலியாக பார்த்து, ஜாலி மூடில் இருக்கும் அவரை காமெடியாக பார்த்து நாம் விட்டுவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
