சேலம் மாவட்டம் மேட்டூர் மூலக்காட்டில் உள்ள சந்தன வீரப்பன் நினைவிடத்தில் வேட்புமனுவை வைத்து மலர்தூவி வணங்கி விட்டு அவரது மகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருமான வித்யாராணி, ஆதரவாளர்களுடன் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்து, மேட்டூர் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்டிஓ சுகுமாரிடம் வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். அப்போது வித்யா ராணி, தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க, எனது தந்தை வீரப்பன் வாழ்க என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது தந்தை வீரப்பன் காட்டில் வாழ்ந்தபோது, மக்களுக்கும், மண்ணுக்கும் பாதுகாப்பாகவும், அரணாகவும் நின்று காத்ததுபோல், மேட்டூர் மண்ணுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பாக இருப்பேன். மக்களின் உயர்வுக்கும், ஊரின் உயர்வுக்கும் 5 ஆண்டுகள் உழைப்பேன் என்று சத்தியம் செய்கிறேன். மேட்டூர் சட்டமன்ற தொகுதி மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
எனது அப்பாவின் நினைவிடமும் இந்த ஊரில் தான் உள்ளது. மக்கள் என்னை கண்ணீருடன் வரவேற்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பேன். டாஸ்மாக் கடைகளை மூடி, பனம்பால், தென்னம்பாலை கொண்டு வருவேன் என்றார்.
