×

பெரம்பூர் தொகுதியில் பிரசாரத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஜய் புகார்

சென்னை: பெரம்பூர் தொகுதியில் தவெக கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று விஜய் தமிழக தலைமை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த விஜய், அந்த தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

பெரம்பூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விஜய், அங்கிருந்து நேராக கொளத்தூர் தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக விஜய்யின் பிரசார வாகனம் கொளத்தூர் நோக்கி சென்ற நிலையில், அவரது வாகனத்தை சுற்றி பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், த.வெ.க.வின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என தலைமை தேர்தல் அதிகாரியிடம் த.வெ.க. தலைவர் விஜய் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை. சாலைகளில் மக்கள் அதிகமாக திரண்டதால் பிரசார வாகனங்கள் முற்றிலும் நின்று போனது. உரிய பாதுகாப்பு வழங்காததால் பிரசாரம் பாதியில் நிறுத்தப்பட்டது. தேர்தல் செயல்முறையில் சமத்துவமின்மை இருப்பதாக சந்தேகம் எழுகிறது. பிரசாரத்திற்கு பாதுகாப்பு வழங்காதது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tags : Perambur ,Vijay ,Tamil ,Nadu ,Chief Electoral Officer ,Chennai ,Tamil Nadu ,Thaweka Party ,Tamil Nadu Vetri Kazhagam Party ,Tamil Nadu Assembly ,Trichy… ,
× RELATED 234 தொகுதியிலும் வேட்புமனு தாக்கல்...