காட்டுமன்னார்கோவில், மார்ச் 29: நடப்பு ஆண்டில் 4வது முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மூலம் 34 பாசன மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி பாசனம் பெறுகிறது. இதற்கிடையே வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை 4வது முறையாக எட்டி கடல்போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் உள்ள சுமார் 50 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து தினமும் சுமார் 73 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதனை கோடைகாலத்தில் பூர்த்தி செய்யும் வகையில் மேட்டூரில் இருந்து பெறப்பட்டு குடிநீரை அனுப்பி வருகிறோம். இந்த கோடை காலம் முழுவதும் சென்னைக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேட்டூரில் இருந்தும் சிறப்பு உத்தரவு பெற்று வீராணம் ஏரிக்கு தண்ணீர் பெற்று தற்போது நிரப்பி உள்ளோம். இந்த தண்ணீர் முழுவதும் சென்னை குடிநீருக்காக மட்டும் பயன்படுத்தப்படும். மேலும் ஏரியின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் ஏரியின் மதகு, கரைகளை ஆய்வு செய்து வருகின்றனர், என்றனர். நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் படைக்காத்தான் ஆகியோர் உடன் இருந்தனர்.
