×

26 ஆண்டில் 20,073 பேர் சரணடைந்த நிலையில் மக்களவையில் 30ம் தேதி நக்சல் ஒழிப்பு விவாதம்: உள்துறை அமைச்சரின் இலக்கு வெற்றியடைந்ததா?

 

புதுடெல்லி: நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தை முழுமையாக ஒழிப்பது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் வரும் 30ம் தேதி உயர்மட்ட ஆலோசனை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் கடந்த 2010ம் ஆண்டில் இடதுசாரி தீவிரவாதம் எனப்படும் நக்சல் அமைப்பின் செயல்பாடுகள் 223 மாவட்டங்களில் இருந்தன.

சுமார் 1,936 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி இருந்ததோடு, பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என 1,005 பேர் உயிரிழந்தனர். 36 மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாகக் கருதப்பட்டன. இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 31, 2026ம் ஆண்டுக்குள் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க இலக்கு நிர்ணயித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டில் மட்டும் சுமார் 2,300 நக்சல்கள் சரணடைந்தனர். சிபிஐ (மாவோ) அமைப்பின் முக்கிய கமாண்டர் மத்வி ஹித்மா கொல்லப்பட்டதும், முக்கிய நிர்வாகிகள் சரணடைந்ததும் அந்த அமைப்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.

தற்போதைய நிலையில், தீவிரவாத பாதிப்புள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை வெறும் 7 ஆகக் குறைந்துள்ளது. வன்முறைச் சம்பவங்கள் ஆண்டுக்கு 230 ஆகவும், உயிரிழப்புகள் 100க்கும் குறைவாகவும் சரிந்துள்ளன. குறிப்பாக சட்டீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர், நாராயண்பூர், சுக்மா, கான்கேர், தண்டேவாடா ஆகிய 5 மாவட்டங்களிலும், ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மற்றும் ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்திலும் மட்டுமே தற்போது நக்சல் நடமாட்டம் உள்ளது.

அங்கு எஞ்சியுள்ள சுமார் 130 முதல் 150 வரையிலான ஆயுதம் ஏந்திய நக்சல் தீவிரவாதிகளை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் இறுதிக்கட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 2000ம் ஆண்டு முதல் மார்ச் 2026ம் ஆண்டு வரையிலான கணக்கீட்டின்படி, நாடு முழுவதும் மொத்தம் 20,073 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்

இந்தச் சூழலில், வரும் 31ம் தேதி நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு ஒருநாள் முன்னதாக, அதாவது நாளை மறுநாள் (மார்ச் 30) மக்களவையில் விவாதம் நடைபெறுகிறது. சிவசேனா எம்பி காந்த் ஷிண்டே மற்றும் தெலுங்கு தேசம் எம்பி பைரெட்டி சபரி ஆகியோர் அளித்த நோட்டீஸின் அடிப்படையில், விதி 193ன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக நக்சல் ஒழிப்பு விவகாரம் விவாதிக்கப்பட உள்ளது.

இதில் ‘சமாதான்’ நீண்டகால திட்டம், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ‘சிவப்பு காரிடார்’ பகுதியை மீட்டெடுப்பதற்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து எம்பிக்கள் ஆய்வு செய்ய உள்ளனர். வரும் ஏப்ரல் முதல் அமைதி திரும்பிய பகுதிகளில் இருந்து ஐந்து துணை ராணுவப் படைப் பிரிவுகளைத் திரும்பப் பெறவும், அங்கு பாதுகாப்பை மாநில போலீசார் மற்றும் சட்டீஸ்கர் டிஆர்ஜி குழுவினரிடம் ஒப்படைக்கவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘ஆயுதமேந்திய அச்சுறுத்தல் தற்போது பூஜ்ய நிலையை நெருங்கிவிட்டாலும், மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதிலும், அந்தப் பகுதிகளில் மக்கள் நலத் திட்டங்களை முழுமையாகக் கொண்டு சேர்ப்பதிலுமே இனிமேல் ஒன்றிய அரசு கவனம் செலுத்தும்’ என்று தெரிவித்தனர்.

Tags : Naxal ,Lok Sabha ,Home Minister ,New Delhi ,Left Wing Extremism ,
× RELATED டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தின்...