×

மேற்காசிய போரால் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடியாகக் குறைப்பு: விற்பனை விலையில் மாற்றம் இல்லை

புதுடெல்லி: மேற்காசிய போரால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.13 என இருந்த கலால் வரி ரூ.3 எனவும், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.10 என இருந்த கலால் வரி பூஜ்ஜியமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், விற்பனை விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின. இதையடுத்து, ஈரானும் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் பின்னர், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கிட்டத்தட்ட 50% உயர்ந்துள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. பெட்​ரோல், டீசல் மீது ஒன்றிய அரசு எண்​ணெய் தொழில் மேம்​பாட்டு வாரிய வரி, தற்​செயல் தேசிய பேரிடர் வரி, கலால் வரி, கூடு​தல் கலால் வரி மற்​றும் சிறப்பு கூடு​தல் கலால் வரி போன்ற வரி​களை விதிக்​கிறது. இந்த சூழலில் மேற்காசிய போர் சூழலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான எரிபொருளுக்கான கலால் வரியை அரசு குறைத்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கலால் வரியை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.13-லிருந்து ரூ.3 ஆகவும், டீசல் மீதான வரியை ரூ.10-லிருந்து பூஜ்ஜியமாகவும் குறைத்துள்ளது. இந்த வரிக்குறைப்புகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. கலால் வரி குறைப்புடன், டீசல் மீது லிட்டருக்கு ரூ.21.5 மற்றும் விமான டர்பைன் எரிபொருள் (ஏடிஎப்) மீது லிட்டருக்கு ரூ.29.5 ஏற்றுமதி வரியை அரசு விதித்துள்ளது. சர்வதேச விலைகள் உயர்ந்து வருவதால், உள்நாட்டில் போதுமான இருப்பு கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்’’ என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தரமதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ,வெளியிட்ட குறிப்பில், சராசரி கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100-105 டாலர் வரை உயர்ந்தால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.11 நஷ்டமும், டீசலில் லிட்டருக்கு ரூ.14 நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த கலால் வரிக்குறைப்பால் பெட்ரோல், டீசல் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க இது பயன்படும் என்றும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில், கலால் வரி குறைப்பு விலை உயர்வில் இருந்து நுகர்வோருக்குப் பாதுகாப்பை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

* ஏற்றிய விலையை குறைக்குமா நயாரா?
மிகப்பெரிய தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனம் நயாரா எனர்ஜி, நேற்றுமுன்தினம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3-ம் திடீரென உயர்த்தியது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு நேற்று குறைத்துள்ளதால் நயாரா நிறுவனம் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Asian war ,New Delhi ,West Asian war ,Union government ,
× RELATED அனைத்து மாநில முதலமைச்சர்களுடன்...