×

அழிவற்ற சக்தியை சுட்டும் நாமங்கள்

அடுத்ததாக கீழே கொடுக்கப்பட்டுள்ள நாமங்களையும் குறித்துப் பார்ப்போம் வாருங்கள்!

134. நிர்லேபா, 135. நிர்மலா, 136. நித்யா, 137. நிராகாரா, 138. நிராகுலா,

139. நிர்குணா, 140. நிஷ்கலா, 141, சாந்தா, 142, நிஷ்காமா, 143, நிருபப்லவா.
இதுவரைக்கும் நாம் பார்த்த முதல் நாமத்திலிருந்து பெரும்பாலான நாமங்கள் அம்பிகையினுடைய சகுண ரூபத்தைத்தான் பார்த்திருக்கிறோம். அதாவது அம்பாளை பாதாதி கேசம் வரை வர்ணித்தலைத்தான் வசின்யாதி தேவதைகள் காண்பித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

இப்போது நாம் பார்க்கப் போவது பகுதியானது நிர்குணத்தை அதாவது குணம் குறிகள் எதுவற்ற பிரம்மமாகிய லலிதாவைப் பற்றி பார்க்கப்போகிறோம். எந்த லலிதாவை சகுண ரூபத்தில் சொன்னோமோ அதே அம்பிகையை நிர்குணமாகவும் வர்ணிக்கிறார்கள்.

ஒரு சாதகனோ அல்லது பக்தனோ அந்த சத்தியத்தை அல்லது அந்த வஸ்துவை ஏதேனும் ஒரு வழியில் சென்று கண்டடைகிறான். இப்படி ஒரு வழியில் சென்றவன் மெல்ல அந்த சத்தியத்தை நெருங்கும்போது அந்த சத்தியமே அதனுடைய பல பரிமாணங்களை காட்டிக் கொடுக்கிறது. நாம் சகுணமாக உபாசித்து நெருங்கும்போது அம்பாளே தன்னை சகுனமாகவும் வெளிப்படுத்திக் கொள்வாள். நிர்குணமாகவும் வெளிப்படுத்திக் கொள்வாள். நிராதாரா என்று சொல்லும்போது ஆதாரம் இல்லாதவள் என்று பார்த்தோம்.

நிரஞ்சனா என்றால் அம்பிகையானவள் பஞ்ச கிருத்தியங்கள் என்று சொல்லக் கூடிய ஐந்தொழிலையும் செய்கிறாள் என்று பார்த்தோம். உடனே நம்முடைய limitation க்குள் கொண்டு வரும் மனமானது அதை ஒரு செயல்பாடாக எடுத்துக் கொள்ளும். நம்மைப்போலவே அம்பிகையும் ஒரு பெரிய செயல்பாடாக செய்கிறாள் என்று நினைத்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. ஆனால், அம்பிகையோ நான் செயல்பாடுகளை செய்தாலும், செயல்களுக்கு அப்பாற்பட்டிருக்கிறேன். நான் உருவத்திலிருந்தாலும் உருவத்திற்கு அப்பாற்பட்டிருக்கிறேன். குணங்களை காண்பித்தாலும் குணங்களுக்கு அப்பாற்பட்டிருக்கிறேன் என்று அம்பிகை ஒவ்வொன்றாக காண்பிக்கிறாள். அப்படி காண்பிக்கும்போது நிர்குணத்தை… நிராதாரா , நிரஞ்சனா, நிர்லேபா, நிர்மலா, நித்யா என்று வர்ணிக்கிறார்கள்.

முதலில் நிராதாரா என்றால் நான் ஆதாரம் இல்லாதவள். இதற்கு அடுத்து நிரஞ்சனா என்று சொல்லும்போது அஞ்ஞானம் இல்லாதவள். இதற்கு அடுத்து நிர்லேபா என்று சொன்னால், லேபம் என்றால் பூச்சு அல்லது பூசுதல் என்று அர்த்தம். உதாரணமாக சந்தனம் பூசினால் அந்த பூசுதல் என்கிற செயலுக்கு லேபனம் என்று பெயர். சுவற்றுக்கு பெயிண்ட் அடித்தால் அதற்கு லேபனம் என்று பெயர். Something which is covering that. நிர்லேபா என்றால் எந்தவிதமான பூச்சும், எந்தவிதமான covering இல்லாதவள் என்று பொருள்.

இதற்கு அடுத்து நிர்மலா… மலம் என்றால் நமக்கே தெரியும். அசுத்தம் என்று பொருள். நிர்மலா என்றால் எந்தவிதமான அசுத்தமும் இல்லாதவள் என்று பொருள். இந்த நான்கு நாமாவையும் இப்போது பாருங்கள்… நிராதாரா என்பதில் கண் என்கிற ஆதாரம் இருக்க வேண்டும். அந்த ஆதாரத்திற்கு மேல் அஞ்சனம் என்கிற மையை தடவுகிறேன். அந்ததடவக் கூடிய மைக்கு லேபம் என்று பெயர். இப்படி தடவக்கூடிய மை கொஞ்ச நேரம் கழித்து முகத்தில் வழியும் வியர்வை, கண்ணீரால் கரையும்போது அந்த மையே அசுத்தமாகி விடும். இதேபோன்று ஒரு சுவரை எடுத்துக் கொள்ளலாம். அந்த சுவரே ஆதாரம். பெயிண்ட் எடுத்துக் கொள்கிறோம், இதற்கு அஞ்சனம் என்று பெயர். அதை பூசுவது என்பது லேபனம். சில வருஷங்கள் கழித்து அந்த பெயிண்டின் மீது அசுத்தம் பட்டு ஒரே அசுத்தமாக மாறிவிடும்.

இப்படி இதை வைத்துக்கொண்டு பார்த்தால், இந்த ஜீவன் என்பது ஆதாரம். இந்த ஜீவனுக்கு மேலே ஏற்பட்ட மூல அஞ்ஞானமே அஞ்சனம் என்கிற மை. அந்த மூல அஞ்ஞானத்தால் ஏற்பட்ட விருத்திகள், வாசனைகள் எல்லாமுமே லேபனம். அந்த லேபனத்தால் ஏற்பட்ட ஜீவனுக்கு ஏற்பட்ட கர்ம பந்தம், ஜனன மரண பந்தம், பிரதி பந்தங்கள் எல்லாமுமே மலமாகும். அசுத்தமாகும்.

இது எதுவுமே அம்பாளுக்கு இல்லை. அவள் ஜீவனாக ஆதாரமாக இல்லை. அதனால் அவள் நிராதாரா. அவள் ஜீவனாகவே இல்லாததால் அவளுக்கு மூல அஞ்ஞானம் எப்படி வர முடியும். அதனால் அவள் நிரஞ்சனா.
மூல அஞ்ஞானமே இல்லாததால் அவளுக்கு வாசனைகளோ , அஞ்ஞான விருத்திகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. அதனால், அவள் நிர்லேபா. இப்படி வாசனைகள் இல்லாத இடத்தில் பிரதிபந்தங்களோ, அசுத்தங்கள் வராததால் அவள் நிர்மலா.

இப்படி நாம் சொல்லக் கூடிய எல்லா limitations க்கும் அப்பாற்பட்டு இருப்பதால் அவள் நித்யா என்றிருக்கிறாள். நித்யா என்றால் eternal என்று அர்த்தம். மேலே சொன்ன ஜீவனுக்கு இருக்கும் தடைகளெல்லாம் இருந்தால் தன்னை eternal ஆக உணர முடியாது. எல்லையற்ற வஸ்துவாக உணர முடியாது. தன்னை ஜீவானனவன் ஒரு பிரதிபந்தத்தோடு நினைத்துக் கொண்டு அழிவுள்ளபொருளாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால், அம்பிகை இது எதுவுமில்லாமல் நித்யாவாக இருக்கிறாள்.

இதற்கு அடுத்த நாமாவான நிராகாரா… என்றால் உருவமற்றவள். உருவங்களுக்கு அப்பாற்பட்டவள். இதற்கு அடுத்த நாமாவாக நிராகுலா… என்பதை பார்ப்போம். இந்த நாமத்தில் ஆகுலம் என்றால் கஷ்டம், துக்கம், வேதனை. இப்போது நிராகுலா என்றால் இந்த துக்கம், கஷ்டம் வேதனை எதுவுமே இல்லாதவளாகும். இதற்கு அடுத்து நிர்குணா…. குணங்களுக்கும் அப்பாற்பட்டவள். ஏனெனில், சத்வ, ரஜஸ், தமஸ் போன்றவையும், ஐந்து தொழில்களையும், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்றெல்லாம் செய்வதால் அவளுக்கு குணங்கள் உண்டோ என்று நினைக்கிறோம். ஆனால், இல்லை… அவள் குணங்களுக்கும் அப்பாற்பட்டவள். நிர்குணா என்று அழைக்கப் படுபவள். நமக்காக சில நேரங்களில் சத்வமாகவும் ரஜோ குணமான உக்கிர ரூபத்தோடும் வருகின்றேன். சௌமிய ரூபத்திலேயோ அல்லது சாந்த ரூபத்திலேயோ வெளிப்படுத்திக் கொள்கிறேன். ஆனால், இதற்கெல்லாம் அப்பாற்பட்டவள்.

இதன் ஆழமான விஷயம் என்னவெனில், when you become nothing… you wil become every thing. தன்னுடைய nothingness ஐ இந்த இடத்தில் காண்பிக்கிறாள். பிறகு everything ஆக அவளே இருக்கிறாள் என்றும் காண்பிக்கிறாள்.
இப்போது வேதாந்தத்தில் நாம் நேதி… நேதி… என்று சொல்கிறோம். ஒவ்வொன்றையும் விலக்குகிறோம் என்று சொல்கிறோம். நாம் இங்கு விலக்குவது நம்முடைய அஞ்ஞானத்தையும், பிரதிபந்தத்தையுமே விலக்குகிறோம். இப்படி விலக்கும்போது ஒன்னுமே இல்லையா என்று நினைப்போம். அப்போது அங்கு ஒன்றுதான் இருக்கும். அந்த ஒன்றுதான் எல்லாமுமாக இருக்கும்.

இதற்கு அடுத்து நிஷ்கலா. கலைகள் என்று சொல்லும்போது தன்னுடைய அம்சங்கள். தன்னுடைய அம்சங்களை பிரித்துக் கொண்டு செயல்படுபவை பார்க்கலாம். அப்போது அம்பாள், என் அம்சங்கள் பிரிந்து செயல்படுவது என்பது ஒரு நிலை. உண்மைதான். ஆனால், இந்த அம்சங்களுக்கெல்லாம் நான் அப்பாற்பட்டவள். அதனால் அம்பாள் நிஷ்கலா.

இப்போது இந்த நிர்குணங்களை எல்லாம் நாம் தெரிந்து கொண்டு, அம்பாளை நாம் தரிசிக்கும்போது நமக்கு எப்படித் தெரிவாள் தெரியுமா? சாந்தமாக தெரிவாள். இதைத்தான் அடுத்த நாமத்தில் சாந்தா என்று வர்ணிக்கிறார்கள். வேதாந்தத்தின் உயர்ந்தநிலை சாந்தம் என்பதாகும். இந்த உயர்ந்த நிலையில் நமக்குள் தோன்றும் பாவத்திற்கு (bhavam) சாந்த பாவம் என்று பெயர். இதற்கு அடுத்து நிஷ்காமா, நிருபப்லவா.

அம்பிகை சாந்த நிலையில் இருக்கின்றபோது…. அவள் நமக்காக என்னதான் செய்தாலும் கூட அவளுக்கு தனிப்பட்ட முறையில் ஆசைகளென்று எதுவும் கிடையாது. நாம் ஆசையினால் ஒரு விஷயத்தைச் செய்வோம். ஆனால், அம்பாள் செய்யக் கூடியதெல்லாம் ஆசையினால் செய்வதல்ல. அதனாலேயே அவளுக்கு நிஷ்காமா என்று பெயர். இதற்கு அடுத்து நிருபப்லவா என்கிற நாமம். உபப்லவம் என்றால் அழிவு என்று பெயர். நிருபப்லவா என்றால் அழிவற்றவள் என்று அர்த்தம்.

இதற்கு முன்னால் நாம் பார்த்த, இந்த ஜீவனுக்கு ஏற்படும் அனைத்து விதமான தடைகளும், பிரதிபந்தங்கள் எதுவுமே அம்பிகைக்கு இல்லை. எனவே, அவள் அழிவற்றவள். நிருபப்லவா… அழிவற்ற நிலையில் இருக்கிறது. இதற்கு முன்னால் நித்யா என்கிற நாமமானது அந்த பிரம்மத்தின் eternity ஐ காண்பித்துக் கொடுத்தது. நிருபப்லவா என்கிற இந்த நாமம் பிரம்மத்திற்கு அழிவில்லை என்கிற முக்கியமான விஷயத்தை நமக்கு காண்பிக்கின்றது.
இந்த நாமங்கள் எல்லாம் சாதகனுக்குள் என்ன செய்யும்.

அம்பாள் என்கிற பிரம்மம் எல்லையற்று இருக்கிறாள். இதையே அம்பிகை ஜீவனுக்குள்ளும் நமக்குள்ளும் காண்பிப்பாள். நிருபப்லவா – அழிவற்றவள். இந்த ஜீவனுக்கு இருக்கக்கூடிய பெரிய பயம் என்ன? அழிவு என்கிற பயம்தான். அதை மரணம் என்றோ, அல்லது நாம் வைத்திருக்கும் விஷயமானது நாசமடையும் என்று வைத்துக் கொண்டாலும் சரிதான், நாம் எப்போதும் பயப்படுகிறோம். அப்போது அம்பாள் உன்னுடைய சாரமாக இருப்பது நானே… நானே சாரமாகவும் அந்தர்யாமியாகவும் இருக்கிறேன். நீ வைத்திருக்கும் ஜீவன் கிடையாது. எனவே நான் அழிவற்றவள். நிருபப்லவா… என்று காண்பிக்கிறாள். அதனால், நீ அழிவைக் கண்டு பயப்பட வேண்டாம். நீயும் அழிவற்றவன்.

நானே நீ. நீயும் நானும் வேறில்லை என்று இருப்பதால், இந்த அழிவு என்கிற பயத்திலிருந்து வெளிக் கொண்டு வருவதற்காக , இந்த எல்லையற்றவள் நிர்குணமாக இருக்கிறேன் என்று காண்பிப்பதற்காக வசின்யாதி வாக் தேவதைகள் இந்த நாமங்களை காண்பித்துக் கொடுக்கிறார்கள். இந்த நாமங்களுக்கான கோயிலாக தேவதானப்பட்டி மூங்கிலணை காமாக்ஷி அம்மன் திருக்கோயிலையே சொல்லலாம். ஏனெனில், இங்கு அம்பாள் உருவமற்ற நிலையில் வழிபடப்படுகின்றாள். நிர்குண, நிராகாரமாக உருவற்ற நிலையில் அருள்கிறாள்.

இக்கோயிலினை கதவுக் கோயில் என்று அழைக்கின்றனர். மூலவராக சிலைகளையோ, படங்களோ இல்லாமல் கதவினை மட்டுமே காமாட்சியம்மனாக வழிபடுகின்றனர். இக்கோயில் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
(சுழலும்…)

Tags : Nirleba ,Nirmala ,Nitya ,Nirakara ,Niracula ,Nirkuna ,Nishkala ,Santa ,Nishkama ,Nirupablava ,
× RELATED ராமபிரான் அருளும் ஆலயங்கள்