×

சகல சம்பத்துகளையும் தந்தருளும் சஞ்சீவி ராயர்

காஞ்சிபுரத்தில் உள்ள அழகிய கிராமம், அய்யங்கார் குளம். இங்கு மிக பெரிய குளம் ஒன்று உள்ளது. அதற்கு, “லட்சுமி குமாரதாதாசமுத்திரம்’’ என்று பெயர். இதன் அருகில் “ஸ்ரீ சஞ்சீவிராயர்’’ என்னும் திருநாமத்தில், ஆஞ்சநேயஸ்வாமி அருள்புரிந்து வருகிறார். இவரைப் பற்றித்தான் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்.

பழைய காலத்து மடப்பள்ளி

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தைவிட்டு வெளியே வந்ததும், “அய்யங்கார் குளம்’’ செல்ல மினி பேருந்துகளும், ஷேர் ஆட்டோக்களும் இருக்கின்றன. அதில் பயணித்தால், அய்யங்கார் குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சற்று தூரம் நடந்து சென்றால், “ஸ்ரீ சஞ்சீவிராயர் கோயிலை’’ அடைந்துவிடலாம். ஷேர் ஆட்டோவில் சென்றால், சஞ்சீவிராயர் கோயிலில் இறக்கிவிடச் சொன்னால், இறக்கிவிடுவார்கள்.

சஞ்சீவிராயர் கோயில் வெளிப்புறத்தில் இருந்து பார்த்தாலே இதன் பழமை நமக்கு நன்கு தெரியும். மிகப்பெரிய அழகிய தோற்றம் கொண்டுள்ளது. பிரம்மாண்டமான அனுமன் கோயில்களில், இந்த கோயிலும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இக்கோயில் முழுவதிலும், எண்ணற்ற பல உயரமான தூண்கள் காணப்படுகின்றன. அதில், பெரும்பாலான தூண்களில், அனுமனின் சிலைகளே காணப்படுகின்றன.

கோயிலின் உள்ளே நுழைந்ததும், பெரிய பிராகாரங்களை காணலாம். மேலும், பழமையான மடப்பள்ளி ஒன்றும் கோயிலில் உள்ளது. அதில், பழைய கால ஆட்டுக்கல், அடுப்புகள் காணப்படுகின்றன. அதே போல், இருபுறத்திலும் மிக பெரிய கற்களால் ஆன, படுக்கை போன்ற ஒரு இடம் உள்ளது. அதில்தான் சமைத்த சாதத்தை கொட்டி, வந்திருந்த அனைவருக்கும் பரிமாறுவர். இன்றும், வருடத்திற்கு ஒருமுறை சமைத்து, சில பூஜைகளை மேற்கொள்கிறார்கள். தற்போது இவைகளெல்லாம் காணக்கிடைக்காதவை!

கோயில் பிராகாரத்தில், ஒரு மதில் சுவற்றில், கோயிலின் சிறப்புகள் பற்றி பத்து ஸ்லோகங்கள் அடங்கிய, அக்கால கிரந்த மொழிகளில் செதுக்கப்பட்டுள்ளன. இதனை பாண்டிச்சேரியில் ஒருவர், தமிழாக்கம் செய்து புத்தகமாக வெளியிட்டதாக தகவல்.

கோயிலை பற்றிய மேலும் பல தகவல்களை நம்மோடு பகிர்ந்துக் கொண்டார், கோயில் நிர்வாகியான திரு.பாபு அவர்கள். அவர் கூறியது அப்படியே…

பார்வைகளை இழந்த திருடர்கள்

முன்னொரு காலத்தில், விஜயநகர பேரரசரான கிருஷ்ணதேவராயரின் அமைச்சரவையில் இருந்த லட்சுமிகுமாரதாதாச்சாரியார், ஏழை எளியோருக்கு பல உதவிகளை செய்து வருபவர். இவர், தீவிர ஆஞ்சநேயரின் பக்தர். ஒரு முறை, அய்யங்கார் குளம் வழியாக வேறொரு இடத்திற்கு உதவிகளை செய்ய, வைர வைடூரியங்களையோடு பயணிக்கிறார்.

பொழுது முடிந்ததால், அய்யங்கார் குளத்திலேயே இரவு பொழுதை கழிக்க எண்ணி, தன் படைபலத்தோடு தங்குகிறார். அந்த சமயத்தில், சில திருடர்கள், லட்சுமிகுமாரதாதாச்சாரியாரையும், படையினர்களையும் தாக்கி, வைர வைடூரியங்களை அபகரித்து தப்பி சென்றுவிட்டனர்.

“அனுமா… இனி நான் என்ன செய்வேன்? ஏழைகளுக்காக வைத்திருந்த நகைகளை எல்லாம் திருடர்கள் அபகரித்துவிட்டார்களே… மன்னருக்கு நான் என்ன பதில் சொல்வேன்? நாளைய தினம் ஏழைகள் காத்துக் கொண்டிருப்பார்களே..’’ என்று லட்சுமிகுமாரதாதாச்சாரியார் வருத்தமடைய, மறுபுறம், நகைகளை கொள்ளையடித்த மகிழ்ச்சியில் கொள்ளையர்கள் சென்றுகொண்டிருக்க, திடீர் என்று வானர கூட்டம், கொள்ளையர்களின் கூட்டத்தை தாறுமாறாக கடித்து துவம்சம் செய்ய, கொள்ளையர்கள் அனைவருக்கும் கண் பார்வை பறிபோகிறது.

பிறகு, ஒரே ஒரு வானரம் (குரங்கு) லட்சுமிகுமாரதாதாச்சாரியாரின் உடையை பிடித்து இழுத்து, கொள்ளையர்களின் இடத்திற்கு அழைத்து செல்கிறது. கொள்ளை போன நகைகள் அனைத்தும், மீண்டும் லட்சுமிகுமாரதாதாச்சாரியாருக்கே கிடைக்கிறது. கொள்ளையர்கள் அனைவரும், லட்சுமிகுமாரதாதாச்சாரியாரின் காலில் விழுந்து வணங்குகிறார்கள்.

“ஸ்வாமி… மண்ணியுங்கள். நாங்கள் அனைவரும் திருந்திவிட்டோம். எங்களுக்கு மீண்டும் பார்வை வேண்டும்’’ என லட்சுமிகுமாரதாதாச்சாரியாரிடம் கேட்கிறார்கள்.
“இதில், நான் என்ன செய்ய முடியும்? என் அனுமனிடத்தில் மனப்பூர்வமாக வேண்டுங்கள். அவனின் அருள் கிடைத்தால், உங்கள் அனைவருக்கும் பார்வை நிச்சயமாக கிடைக்கும்’’ என்று லட்சுமிகுமாரதாதாச்சாரியார் கூறுகிறார். அதன்படி மனமுருகி பார்வை கிடைக்க, கொள்ளையர்கள் வேண்டுகிறார்கள். அந்த சமயத்தில், ஒரு பாறையில் சுயம்புவாக அனுமன் தோன்றி, மனம் திருந்திய திருடர்களுக்கு, மீண்டும் பார்வையை கிடைக்கச் செய்திருக்கிறார் என்று ஒரு தரப்பு வரலாறு கூறுகிறது.

வியாசராஜர்தான் என்று யூகிக்க முடிகிறது

அதே சமயத்தில், விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயரின் ராஜகுருவாக இருந்தவர், ஸ்ரீ வியாசராஜதீர்த்தர். ஆகையால், லட்சுமிகுமாரதாதாச்சாரியாருடன் பழக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக மகான் ஸ்ரீ வியாசராஜர் இந்த அனுமனை பிரதிஷ்டை செய்திருக்கலாம் என்கின்ற கூற்றும் உண்டு. அனுமனின் பெயர்கூட “சஞ்சீவி ராயர்’’ என்று வருவதால், வியாசராஜருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. மேலும், இக்கோயிலை விஜய நகர பேரரசர் கட்டியதாக வரலாறுகள் கூறுகின்றன. விஜய நகர பேரரசர், தானாக கோயில் கட்ட வாய்ப்பில்லை. தன் ராஜகுருவான ஸ்ரீ வியாசராஜரின் மூலமாகவே கட்டியிருக்க வாய்ப்புகள் உள்ளன. அதே போல், வேலூர், ஆரணி ஆகிய பகுதிகளில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனை காணமுடிகிறது. அதன் பொருட்டு, அய்யங்கார் குளத்தின் மகிமைகளை அறிந்த வியாசராஜர் இங்கும் பிரதிஷ்டை செய்திருக்கலாம். மேலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனுமன், பெரும்பாலும் ஆற்றோரம் ஒட்டியே காணப்படும். இந்த சஞ்சீவி ராயர் கோயில் அருகிலும், பாலாறு ஓடுகிறது. இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, மகான் ஸ்ரீ வியாசராஜர் சஞ்சீவி ராயரை பிரதிஷ்டை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிறிய நுழைவாயில்

சுமார் 650 ஆண்டுகள் பழமையான இக்கோயில் சஞ்சீவி ராயரை சேவித்துவிட்டு, சிறிய நுழைவாயில் வழியாக குனிந்து பிரதட்சணமாக சஞ்சீவி ராயரை வலம்வரவேண்டும். அப்படி பிரதட்சணமாக வலம் வரும் போது, மாணவ – மாணவியர்கள் விதவிதமான அனுமனை ஓவியங்களாக வரைந்துள்ளனர். அதனை ரசித்தவாறு, சஞ்சீவிராயரை நன்கு வேண்டிக் கொள்ளலாம். வடக்கு முகமாக காட்சியளிக்கும் அனுமன், வளங்களை வாரிக்கொடுப்பார் என்னும் சொல்லாடை பெரியோர்களால் சொல்வதுண்டு. அது போல, சஞ்சீவி ராயரும் வடக்கு முகமாக காட்சியளிப்பது சிறப்பு! சனிக்கிழமை அனுமனுக்கு உகந்த நாள் என்பதால் அப்போது பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவார்கள். அதே போல், ஞாயிறு அன்று விடுமுறை என்பதால் அப்போது, பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.

மேலும், அனுமன் ஜெயந்தி அன்று சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப் படும். தற்போது, கும்பாபிஷேகத்திற்காக கோயிலில், தீவிரமாக திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கைங்கரியம் செய்ய விரும்புவோர், 9444661434 என்கின்ற எண்களை தொடர்புக்கொள்ளலாம்.

குறிப்பு

சஞ்சீவி ராயர் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ., பயணித்தால், வடகரை மேடு மலையாள ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலும் லட்சுமிகுமாரதாதாசமுத்திரம் குளத்தை ஒட்டியே இருக்கிறது. தாயார் முன்பு அமர்ந்து பக்தர்கள் உரையாடினால், கவுளியின் (பல்லி) மூலமாக தாயாரும் பக்தர்களிடம் உரையாடுகிறார். மேலும், லட்சுமிகுமாரதாதாசமுத்திர குளம் அருகில் வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணர், கோவர்த்தனகிரி கிருஷ்ணர், ரெங்கநாதப் பெருமாள், அன்னமாச்சாரியாருடன் ஸ்ரீ னிவாசப் பெருமாள் ஆகிய அழகிய பழங்கால சிற்பங்கள் இருக்கின்றன.

மேலும், வடகரை மகாலட்சுமி கோயிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில், “நடவாவி கிணறு’’ என்று சொல்லப்படும் பாதாள கிணறு உள்ளது. இக்கிணறு பிரசித்தி பெற்றவையாகும். சித்ராபௌர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், இந்த நடவாவி கிணற்றில் எழுந்தருளி காட்சியளிப்பார். ஆக, அய்யங்கார் குளத்தில் சஞ்சீவி ராயர் கோயில், வடகரை மகாலட்சுமி கோயில், நடவாவி கிணறு ஆகியவைகளை ஒட்டுக்க தரிசிக்கலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 7:00 முதல் 12:00 வரை, மாலை: 4:00 முதல் 7:00 வரை.

எப்படி செல்வது: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அய்யங்கார் குளத்திற்கு மினி பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் செல்கின்றன.

Tags : Sanjeevi ,Kanchipuram ,Ayyankar Kulam ,Lakshmi Kumaradatasamuthram ,Anjaneyaswami ,Sri Sanjeevi Rayar ,
× RELATED ராமபிரான் அருளும் ஆலயங்கள்