×

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி. தெய்வ பக்தி மிகுந்த அந்தத் தம்பதிகள் பல காலம் குழந்தை செல்வம் இல்லாமல் வருந்தினார்கள். நெடு நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மீராபாய் என்று பெயர் வைத்தார்கள். பல காலம் கடந்து பிறந்த குழந்தை அல்லவா? அதனால் அன்பு மிகுதியாகவே இருந்தது. குழந்தைக்குத் தகுந்த வயதில் கல்வி கற்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

குழந்தை மீரா விளையாடும்போது கூட அந்த விளையாட்டுகளில் தெய்வபக்தி மணம்தான் வீசும். இப்படிப்பட்ட அந்தக் குழந்தைக்கு, சாது ராமானந்தர் எனும் பெரும் மகானின் சீடரான ராய்தாஸ் என்பவர், ஒரு கிருஷ்ண விக்கிரகத்தை கொடுத்து அருள்புரிந்தார். மீராவும் அந்த உத்தமர் கொடுத்த விக்கிரகத்தை மிகவும் அன்போடும் பக்தியோடும் பூஜைசெய்து வந்தார். அரண்மனையில் அவ்வப்போது பாகவதக் கதைகள் சொற்பொழிவுகளாகச் சொல்லப்படும். அவற்றை எல்லாம் திறந்த வாய் மூடாமல் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பார் மீரா. கண்ணனது பெருமைகள், கண்ணனது எளிமை, கண்ணனது அடியார்களை காக்கும் அன்பு, இவ்வளவும் மீராவின் மனதில் விரிவாக இடம் பெற்றன.

நாளாக நாளாக மீராவின் மனம், ‘‘இந்தக் கண்ணனைத்தான் நாம் கணவராக அடைய வேண்டும்” என்று தீர்மானித்தது. அதேநேரத்தில் குழந்தையின் பக்தியும் வளர்ந்தது. மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்’ என்று சொல்லும் ஆண்டாள் வார்த்தைப்படி, கண்ணனைத் தவிர வேறு யாரையும் கணவராகக் கருத மாட்டேன்; கைபிடிக்க மாட்டேன்” என்கின்ற எண்ணமும் மீராவின் மனதில் அழுத்தமாக வளர்ந்தது.

மீராவின் எண்ணத்தை அறிந்தார்கள் பெற்றோர்கள். தந்தை பார்த்தார்; நாளாக நாளாகத் தீவிரமாகிக் கொண்டிருக்கிறதே இவள் நடவடிக்கைகள் என்று எண்ணி மீராவிடம், ‘‘அம்மா! மனிதப் பெண் இறைவனை மணந்துகொள்ள நினைப்பது தவறு! பூசித்துப் போற்றி வணங்குவது தான் முறை” என்று எவ்வளவோ புத்திமதிகள் சொல்லிப் பார்த்தார்.ஆனால், மீராவோ அதை ஏற்கவில்லை; ‘‘அடியார்களுக்காகக் கண்ணன் எவ்வளவோ செய்ததாக, நம் அரண்மனையில் நடக்கும் சொற்பொழிவுகளில் கேட்டிருக்கிறீர்களே! அப்படிப்பட்ட எளிமையும் அன்பும் நிறைந்த அந்தத் தெய்வமான கண்ணன், என் விருப்பத்தை நிறைவேற்றாமல் இருப்பாரா?” என்று கேட்டு ஒரு வேண்டுகோள் வைத்தார்;” அப்பா! எனக்கு ஓர் உதவி செய்யுங்கள்! இந்த அந்தப்புரத்தில் பஜனைகள், பாகவத ஆராதனைகள் (அடியார்களை ஆண்டவனாகவே கருதி வழிபாடு செய்வது) நடக்க ஏற்பாடு செய்யுங்கள்!” என்று வேண்டினார்.

‘‘சரி! இப்போது இவள் எண்ணப்படியே ஏற்பாடுகள் செய்வோம். காலப்போக்கில் இவள் மனம் மாறும்’’ என்ற எண்ணத்தில் தந்தையும் அனுமதி கொடுத்தார். அங்கே அரண்மனையில் பஜனை நிகழ்ச்சிகளும் பாகவத வழிபாடும் அற்புதமான முறையில் நடந்தன; பக்தி மயமான சங்கீதமும் தவிழ்ந்தது. அரண்மனையில் நடைபெறும் பக்தி மயமான நிகழ்வுகள், ஊரில் உள்ள பொறாமைக்காரர்களின் கண்களை உறுத்தின; அவதூறு பேசினார்கள்.

அதை அறிந்தார் மன்னர்; உத்தமமான மகளைப் பெற்று, தெய்வத்தைப்போல அவளை வளர்த்துக் கொண்டு வருகிறேன். அப்படி இருக்கும்போது, இந்த அவச்சொல் எதற்கு?” என்று தீர்மானித்த மன்னர், தன் மனைவியை அழைத்து நடந்ததை எல்லாம் அவளிடம் விவரித்து, ‘‘அம்மா! ஆகவே நாம் சொல்வதை மறுக்காதே! மீராவுக்கு நஞ்சைக் கொடு!” என்றார். அதைக் கேட்ட சந்திரமுகி தவித்தாள். தாய் அல்லவா? ‘‘என் கையால் வளர்த்த என் செல்வம்! தெய்வம் தந்த அருள் சுடர்! அப்படிப்பட்ட மீராவுக்கா விஷம் கொடுப்பது! என்ன பைத்தியக்காரத்தனம் இது? அரசுக்குரிய என் கண்மணிக்கு கல்யாண கோலத்தில், மாலையும் கழுத்துமாகப் பார்க்கவேண்டிய என் தங்கத்திற்கு விஷம் கொடுப்பதா?” என்று துடித்துத் தவித்தாள் சந்திரமுகி.

அதே சமயம் ஓர் அசரீரி கேட்டது. ‘‘அம்மா! சந்திரமுகி! வருந்தாதே நீ! அடியவர்களுக்கு நஞ்சும் அமுதமாவதும் ஓர் அற்புதமோ? கொடு! மீராவுக்கு ஒன்றும் நேராது” என்றது. இது உண்மையா… அல்லது நம்முடைய பிரமையா?’ என்று எண்ணியவளாய் பெருமூச்சு விட்டாள் சந்திரமுகி; அதே வேளை, கணவன் சொல்லை மறுக்க முடியாமல், அந்தத் தாயின் கரங்கள், அன்னம் ஊட்டிய அந்தத் தெய்வ மணிக் கைகள் விஷக் கிண்ணத்தை மகளிடம் கொடுத்தன.

கண்ணீர் பெருக முகத்தில் அறைந்து கொண்டு, கதறிக் கீழே விழுந்தாள் அந்தத் தாயார்.நடந்ததை எல்லாம் உணர்ந்த மீராவோ, ‘‘அம்மா! ஏன் வருந்துகிறாய்? இதுவும் அந்தக் கண்ணனின் சோதனை தான்! பிரகலாதனுக்கு விஷம் கொடுக்கவில்லையா?” என்று கேட்டு விட்டு, ‘‘கிரிதாரி! கண்ணா! இது உனக்கே அர்ப்பணம்!” என்று அந்த விஷத்தைக் குடித்தாள், மீரா; ‘கலகல’ எனச் சிரித்தார். தாயார் திகைத்தாள்.

அதே நேரத்தில் ஓர் அற்புதம் நடந்தது. ஏற்கனவே நீல நிறமாக இருந்த (மீரா வழிபட்டு வந்த) கிருஷ்ண விக்கிரகம் இப்போது மேலும் நீலநிறமாக மாறிக் காட்சி தந்தது. மீராவுக்கு தரப்பட்ட நஞ்சை, கண்ணன் ஏற்றுக்கொண்டு விட்டார். அவ்வளவுதான்!இந்தத் தகவல்கள் ஊரெங்கும் பரவின. அரசன் முதல் அனைவருக்கும் இந்த நிகழ்ச்சி திகைப்பை ஊட்டியது. மீராவின் அழுத்தமான பக்தியை அறிந்து எல்லோரும் அவரை வணங்கினார்கள்.

கிருஷ்ண விக்கிரகம் பழைய நிலையை அடைந்தது அந்தக் காலத்தில் மேவார் நாட்டை ஆண்டு வந்த அரசர் கும்பராணா. அவர் மீராவின் தூய்மையான பக்தியை அறிந்தார். அரசகுல வழக்கப்படி ஏற்கனவே மனைவியர் பலர் இருந்தும், தெய்வபக்தி உள்ள ஒரு மனைவி இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மீராவை மணக்க நினைத்தார். அந்த எண்ணத்தைத் தூதர்கள் மூலம் மீராவின் பெற்றோருக்கும் தெரிவித்தார்; பெற்றோர்கள் மூலம் மீராவுக்கும் தெரிவிக்கப்பட்டது.

கண்ணனின் பெருமையையும் எளிமையையும் நினைத்து நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த மீராவுக்கு, ‘‘கண்ணனையே மணக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நாம், ஒரு மனிதனை மணம் கொள்வது சரியல்ல” எனத் தோன்றியது.

இக்கட்டான நிலை. என்ன செய்வது?

அந்தச் சமயத்தில்தான், மீரா ஓர் அற்புதமான கனவு கண்டார். மீராவின் கனவில் தாயார் சந்திரமுகி தெரிந்தாள். அதேசமயம் கண்ணனே ஒரு முதியவராக வந்து, ‘‘கோபிகைகள் எல்லோரும் எப்படி பக்தி செய்தார்கள்? அவர்களுக்கு வீடு, வாசல், கணவன், குழந்தைகள், மாடுகள்-கன்றுகள், தங்கள் இல்லறக் கடமைகள் என எல்லாம் இருந்தன. அவைகளுக்கு இடையே அவர்கள் பக்தி செய்யவில்லையா? கண்ணனிடம் பேரன்பு கொண்டவர் கும்பராணா. அவரை ஏற்றுக் கொள்!” என்று சொல்லி மறைந்தார்.

கனவு கலைந்தது. கனவில் வந்து அந்த முதியவர் சொன்னது நியாயம் என்றே நினைத்தார் மீரா. மனிதப் பிறவியாகிய நாம் அப்படித்தான் நடக்க வேண்டும் என்பது ஈசனின் திருவுள்ளம் போலும் என்றே நினைத்தார். அதன் பிறகு என்ன? மீராவும் ஒப்புக்கொண்டார்.மீராவுக்கும் கும்பராணாவுக்கும் திருமணம் நடந்தது. கும்பராணா தலைசிறந்த பக்தர் என்பது மட்டுமல்ல; அவர் தலை சிறந்த ரசிகரும் கூட; ஜெயதேவரின் கீதகோவிந்த மகா காவியம் என்பதற்கு ‘ரசிப்பிரியா’ என்ற பெயரில் உரை எழுதி இருக்கிறார்; கூடவே ‘சங்கீத ராஜம்’ என்ற சங்கீதத்தைப் பற்றிய நூலையும் எழுதியவர் இதே கும்பராணாதான்.

அப்படிப்பட்ட அவர் மீராவின் வரவினால், புதியதோர் உத்வேகத்தை உற்சாகத்தை அடைந்தார்; மீராவுக்காக ஒரு கோவில், அன்னதான சத்திரம், பாகவத கோஷ்டிகள் வந்தால் தங்குவதற்கு வேண்டிய வசதிகள் என எல்லாவற்றையும் ஏற்படுத்திக் கொடுத்தார். ஊரெங்கும் மீராவின் பாடல்களும் நாமாவளிகளும் எதிரொலித்தன.அமைதியாகப் போய்க் கொண்டிருந்த அந்த வேளையில், ‘‘மீராவுக்கு மட்டும் பெருமை கொடுத்துக் கொண்டிருக்கிறார் மன்னர்” என்று அரசரின் மூத்த மனைவி பொறாமைப்பட்டாள். அவளுக்கு அது பிடிக்கவில்லை. அதே சமயம் அந்த ராணியின் தீய எண்ணத்திற்கு ஒத்தூதி மேலும் அதை விசிறிவிட, மன்னரின் தங்கையான ஊதாவும் உதவினாள்.

கேட்க வேண்டுமா? கள்ளம் கபடமே தெரியாத பச்சிளம் குழந்தை மனம் கொண்ட மீராவுக்கு, என்னென்ன வகையில் எல்லாம் தீங்கு செய்யலாம் என்று தீர்மானித்தார்கள். அதற்காக மந்தார் ராஜகுமாரன் என்பவனை ஏற்பாடு செய்ய, அவன் ஒரு நாள் அந்தப்புரத்துக் கோவிலில் பஜனைக்கு வர அனுமதி கேட்க மீராவும் அனுமதித்தார். ‘‘நீ மட்டுமல்ல. யாராக இருந்தாலும் சரி?” என்று அனுமதி கொடுத்தார்.

அதே சமயம் மீராவை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்த அந்தப் பொறாமை கும்பல், மீராவுக்கும் அந்த அரச குமாரனுக்கும் ஓர் கற்பனை மயமான இணைப்பை ஏற்படுத்தி, இழிவு செய்யும் வேலையை பரப்பினார்கள். மன்னரின் தங்கையான ஊதாவும் மீராவைப்பற்றிய தவறான தகவல்ளைப் பரப்பினாள். அது மெல்லப் புகைந்துகொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து ஏகாதசி உற்சவம் நெருங்கியது. அங்கே ஏகாதசி என்று மீராதேவி தெய்வ வடிவமாகவே காணப்படுவார்; தாம் அரசி என்பதை மறந்து ஆடியும் பாடியும் அங்கே வழிபாடு செய்வார்.

இந்துக்கள் மட்டுமல்ல; இஸ்லாமியர்களும் பௌத்தரும் ஜெயினரும் அங்கே வந்து குவிவார்கள்.மீரா பாடும் பாடல்களின் இனிமையும் தூய்மையான பக்தி நிறைந்த அப்பாடல்களின் பொருளும், அக்பர் பாதுஷா வின் காதுகளிலும், கவிஞர் தான்சேன் காதுகளிலும் விழுந்தன. ‘‘இந்த ஏகாதசி பஜனையின் போது மீராவைக் காண வேண்டும். தூய்மையான அந்த இசையை நாம் அனுபவிக்க வேண்டும்” என்ற ஆவல் தோன்றியது, அவர்களுக்கு. முறைப்படி ராஜ மரியாதைகளுடன் போவது முறையல்ல; ஒரு சாதாரண பக்கிரி வேஷத்தில் சாதாரண ஒரு பக்தரைப்போலப் போக வேண்டும் என்று முடிவுசெய்து, அக்பரும் தான்சேனும் அந்த ஏகாதசி பஜனையில் கலந்து கொண்டார்கள்.

அனைவரையும் ஆட்டிப்படைக்கும் மீராவின் பாடல்கள் அக்பரையும் தான்சேனையும் விட்டு வைக்குமா என்ன? மீராபாயின் தெய்விகத் தோற்றமும் குரலும், பாடல்களும் அவற்றை வாங்கிப் பாடும் பாகவதர்களின் ஒருமித்த குரலும் அக்பரையும் தான்சேனையும் வசம் இழக்கச் செய்தன; விலை உயர்ந்த நல்ல முத்து மாலையை மீராவின் கிரிதர கோபாலனுக்குக் காணிக்கையாகப் படைத்தார் அக்பர். ‘‘இப்படிப்பட்ட பெண் ரத்தினங்களால்தான், பாரத தேசம் பெருமை அடைகிறது” என்ற படியே தான்சேனுடன் அங்கிருந்து திரும்பினார் அக்பர். அக்பரும் தான்சேனும் வந்துவிட்டுப் போனது யாருக்குமே தெரியாது.

உலகம் எனும் ஆட்ட அரங்கில் காலம் என்பது கணக்கிட்டுக் காய்களை நகர்ந்துகிறது. அந்த நகர்தலில் கும்பராணாவும் அகப்பட்டார்.அக்பரும் தான்சேனும் வந்துவிட்டுப் போனார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அந்த நிலையிலும், மீராவின் கணவரான அரசரின் உள்ளத்தில் ஏதோ ஓர் எண்ணம் தோன்றியது. மீராவின் ஆட்டம்-பாட்டம், பாகவதர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு இவ்வாறு அவர் பஜனையில் ஈடுபடுவது என எல்லாமே, மன்னரின் மனத்தில் மாறுபாட்டை உண்டாக்கின.

நல்ல மரத்தில் பாய்ந்த புல்லுருவி போன்ற அந்த மாறுபாடு, வெளிப்படையாகவே அரசரின் வாயிலிருந்து வெளிப்பட்டன. ‘‘அரசகுலத்தில் பிறந்து அரச குலத்திலேயே வாழ்க்கைப் பட்டும், இவள் சிறிதுகூடக் கௌரவம் பார்க்காமல் எல்லோருட னும் சரி சமமாக பழகுகிறாளே?” என்ற எண்ணம் தோன்றியது; அதை மீராவிடம் வெளிப்படையாகவே சொன்னார். மன்னரின் வார்த்தைகள்-கணவரின் வார்த்தைகள் மீராவின் பூப்போன்ற மனத்தைத் தூள்தூளாக்கிவிட்டன.

மீரா மென்மையாகக் கணவரைப் பார்த்து, ‘‘சுவாமி! ஜாதி, குலம், ஆண் – பெண் என்றெல்லாம் விரிவாகச் சொன்னீர்கள். ஜாதி ஏது? குலம் ஏது? யார் ஆண்? யார் பெண்? சர்வேஸ்வரன் ஒருவன்தான் ஆண். நாம் எல்லோருமே பெண்கள் தான்; அவன்தான் பதி. நாம் பசுக்கள். ஒரே குலம்தானே?” என்று கேட்டார், மீரா.ராணா மேலும் பேசத் தயங்கினார். வாயை மூடிக்கொண்டார். ஆம்! அதன்பிறகு சற்று வாயை மூடிக்கொண்டுதான் இருந்தார்; வாதாடவில்லை.

நாட்கள் கடந்தன. அக்பரும் தான்சேனும் அங்கே பக்கிரி வேடத்தில், மீராவின் ஏகாதசி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பார்த்ததும்; விலை உயர்ந்த முத்து மாலையை அளித்த செய்தியும் எப்படியோ மக்கள் மத்தியில் முழுவதுமே தெரிந்து போனது. கேட்க வேண்டுமா?

ஒரு குடம் பாலில் ஒரே ஒரு சொட்டு விஷம் கலந்தால் போதுமே! அதுபோல ஏற்கனவே மனதில் ஏதோ மாறுபாட்டை கொண்டிருந்த அவருடைய மனத்தையும் அச்செய்தி குழப்பியது. மீராவோ கணவருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்து முடித்து மற்ற நேரங்களில் பஜனை பாட்டு என்று இருந்தாள்.

பெரிய ராணியும் மன்னரின் சகோதரி ஊதாவும் மெள்ள மெள்ள அரசரின் மனத்தை கலைத்தார்கள். ராணாவுக்கோ, மீராவின் தன் மனைவி என்ற நிலைமாறி, அதாவது மனைவி என்ற நிலையும் மாறி, ‘‘இவள் தெய்வப் பெண்!” என்று தோன்றியது. ‘‘இப்படிப்பட்ட அருமையான ஒரு கணவரை தெய்வம் கொடுத்ததே!” என்று மீராவும் தெய்வத்திடம் மேலும் அன்பு கொண்டார். அற்புதமான கவிதை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் சில நாட்கள் கடந்தன. பெருங்காயம் இருந்த பாத்திரத்தை என்னதான் அலம்பி வைத்தாலும் அதனுடைய வாடை போகாது என்பார்கள். அதுபோல, என்னதான் மீராவைத் தெய்வமாக நினைத்திருந்தாலும், ஒரு நாள்… ராணா மீராவைக் கோபித்துக் கொண்டார்! ‘‘அக்பர் பாதுஷா வந்ததும், கூடவே தான்சேன் வந்ததும், அவர்கள் முத்துமாலை அளித்ததும் உனக்குத் தெரியாதா?” எனக் கேட்டார். அவர்கள் வந்ததோ, திரும்பிப் போனதோ மீராவுக்குத் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் அங்கு வந்த யாரையுமே மீராவுக்கு தெரியாது. அவ்வளவு பேர்களையும் மீரா தெய்விக வடிவங்களாக தெய்வத்தின் பிரதி பிம்பங்களாகவே பார்த்தார்.

அப்படிப்பட்ட எண்ணத்திலேயே இருந்த மீராவின் உள்ளம், ‘‘பாதுஷாவும் வந்தாரா? அது எப்படித் தெரியும் எனக்கு? ஏராளமான பக்தர்கள் கிரிதாரி கண்ணனின் நாம சங்கீர்த்தனம் செய்யும் இடத்தில், யார் என்று எப்படித் தெரிந்து கொள்வேன்? பெண்ணென்று பூமியில் பிறந்துவிட்டால், பக்தி செய்வதும்கூடத் தவறா” என்று ஓலமிட்டது.

‘‘கணவரின் பாதசேவைதான் முதலில் என்று இருந்தும் என்மேல் களங்கமும் தோன்றுமோ? பிருந்தாவன கோபிகைகளை உதாரணம் சொன்னான் என் கிரிதாரி! கண்ணன் அவனே இதற்கும் விடை சொல்லட்டும்” என்று நினைத்த மீரா, அன்று பஜனை முடிந்ததும் அரண்மனை திரும்பவில்லை; நேரே பிருந்தாவனத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டார்.

மீரா நாட்டைத் துறந்து வெளியே போகிறார் என்ற செய்தி தெரிந்ததும் ராணா ஓடி வந்தார். ‘‘மீரா! மீரா! மீண்டும் அரண் மனைக்கு வந்துவிடு மீரா! வந்து விடு மீரா!” என்று கெஞ்சினார்.
ஆனால், மீராவோ அரண்மனை வாழ்வை விரும்பவில்லை; ‘‘உங்கள் கோபமும் என் வைராக்கியமும் அந்த கிரிதாரி கண்ணனின் திருவுள்ளம்” என்று சொல்லி விட்டுத் திரும்பிப் பார்க்காமலே நடந்தார். கண்ணீர் வழியும் கண்களுடன் மீராவையே பார்த்துக் கொண்டு நின்றார், ராணா.

மீரா அரண்மனையை விட்டு வெளியேறிப் பிருந்தாவனம் போன செய்தி நாடெங்கும் பரவியது. ஊரார் அனைவரும் ராணாவின் கல் நெஞ்சைப் பற்றி ஏசி இகழ்ந்தார்கள். மந்திரி ரகுநாத பட்டரும் ராணாவைக் கண்டு, மன்னா! நீங்கள் போய் மீண்டும் மீராவை அழைத்துக் கொண்டு வாருங்கள்!” என்று அழுத்தமாகச் சொன்னார்.இதைக் கேட்ட ராணாவின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.‘‘மீராவிடம் நான் நடந்துகொண்ட விதம் தவறு” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

அதே சமயம் அக்பர் பாதுஷாவிடமிருந்து ராணாவுக்கு ஓர் ஓலை வந்தது;” நான் வந்தது மீராவின் வழிபாடுகளைப் பார்ப்பதற்காகத்தான். உலகிலேயே உயர்ந்த முத்துமாலையை கிரிதாரி கண்ணனுக்கு அளித்ததற்கு காரணம், மீராவின் உத்தமமான அந்த தூய்மையான பக்தியே! இதன் காரணமாக நேரிட்டதை அறிந்தேன். கோபமும் வருத்தமும் அடைந்தேன். நான் மீராவைத் தெய்வமாகவே நினைத்து வந்தேன். மீரா நாடு துறப்பது ராஜ நீதிக்கே விரோதம். ஆகையால், மீரா மீண்டும் மேவாருக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால், நாம் படை எடுப்பது நிச்சயம் என இருந்தது.

மனம் உருகியது ராணாவுக்கு. எப்படியாவது மீராவை அழைத்து வரவேண்டும் என்று ராணாவின் அமைச்சர் கூற, மன்னரும் மந்திரியும் கிளம்பினார்கள்.பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் சந்நதியில் கோஸ்வாமி என்ற பெரியவர் இருந்தார். அந்தப் பெரியவரின் நூல் ‘உஜ்வல நீல மணி’ என்ற பெயருடையது. இவர் பெண்களைப் பார்ப்பதில்லை என்ற விரதம் கொண்டவர். பிற்பாடு மீரா தேவியின் கருத்துக்களைக் கேட்டு உள்ளம் தெளிவடைந்தார்.

அந்தச் சந்தர்ப்பத்தில்தான் ராணா அங்கு வந்து சேர்ந்தார். மீராவின் உண்மையான பெருமை ராணாவுக்கு புலனானது. மீராவைப் பழையபடியே மேவாரிலேலே வந்து வசிக்கும்படி வேண்டினார் ராணா.மீரா சொன்னாள், ‘‘எனக்கு இனி ஊரேது? உறவேது? கண்ணன் இருப்பிடமே என் இடம். பக்தி செய்வதுதான் என் தொழில். அப்படிக் கோவிலிலேயே காலம் கழிப்பதனால், நான் வருகிறேன். அரசி என்ற நிலையில் இனி என்னால் வாழ முடியாது” என்றார்.

V.R.சுந்தரி

Tags : Bhagtha Mirabai ,Ratnasing ,Udaipur ,Chandramuki ,
× RELATED அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை