×

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9ம் தேதி தொடங்கும்

சென்னை: பிளஸ் 2 தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9ம் தேதி தொடங்க, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. திருத்தும் பணியில் தமிழ்நாடு முழுவதும் 45 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நேற்றைய தேர்வில் தொடர்பு ஆங்கிலம், இந்தியப் பண்பாடு, கணினி அறிவியல், கணினிப்பயன்பாடு, உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ் உள்ளிட்ட 11 பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன.

கடந்த 2ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வுகள் நேற்று மதியம் 1.15 மணியுடன் முடிந்தன. மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் தேர்வு நடந்த வளாகங்களை விட்டு வெளியேறினர். தேர்வு முடிந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். நீண்ட கால பள்ளி படிப்பை முடித்து பிரியாவிடை பெற்ற நிகழ்வுகள் காண்போரை நெகிழ வைத்தன.

இதையடுத்து, அனைத்து விடைத்தாள்களும் 28ம் தேதி மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு பெறப்பட்டு, அங்கு டம்மி விடைத்தாள்கள் முகப்பு ஒட்டப்பட்டு, ஏப்ரல் 4ம் தேதி 40க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

திருத்தும் மையங்களில் ஏப்ரல் 8ம் தேதி முதன்மைத் தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்துவர். ஏப்ரல் 9ம் தேதி உதவித் தேர்வாளர்கள் மதிப்பீடு செய்வார்கள். அதற்கு பிறகு முதுநிலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த தொடங்குவார்கள். விடைத்தாள் திருத்தும் பணிகளை மே மாதம் முதல் வாரத்தில் முடிக்கவும் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கு பிறகு மே 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED ஒரே கூட்டணியில் இருப்பதால் சமரசம்...