×

மோரில் விஷம் வைத்துக் கொன்ற கோழைகள்; எங்க ஆட்சிலதான் வீரப்பனை கொன்னோம்னு அதிமுக சொல்லுமா?: சீமான் சவால்

சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா ராணியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று மேச்சேரியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, சீமான் பேசியதாவது: ஆங்கிலம் தான் அறிவு என்று கருதிய மக்கள், உலகின் தலைசிறந்த மொழியான தமிழ்மொழி பெருமை குறித்து உணரவில்லை.. தமிழ்மொழி சிதைந்து அழிந்து கொண்டு வருகிறது. கர்நாடகாவிடம் இருந்து 500 டிஎம்சி பெற வேண்டிய நாம், 150 டிஎம்சி தண்ணீருக்காக கையேந்தி நிற்கிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தண்ணீர் தேவையில் தன்னிறைவு திட்டம் கொண்டு வந்து கடலில் கலப்பதை தடுத்து நிறுத்தி ஏரிகள், குளங்களை நிரப்பி, அடுத்தவரிடத்தில் கையேந்தி நிற்கிற நிலைமையை மாற்றுவோம். வேளாண்மையை கைவிட்டு நம் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள், ஆடு, மாடு வளர்ப்பது அரசு பணி என்று நாங்கள் சொல்கிறோம்.
நாங்கள் வந்தால் மிக்சி தருவோம், கிரைண்டர் தருவோம், அண்டா தருகிறோம், ஐயாயிரம் தருகிறோம், 10,000 தருகிறோம், பிரிட்ஜ் தருவோம், டிவி தருவோம் என்றெல்லாம் சொல்ல மாட்டோம்.

நீங்களே அதனை வாங்கிக் கொள்கிற வேலைவாய்ப்பையும், வருவாய் பெருக்கத்தையும் ஏற்படுத்தி கொடுப்போம். மேட்டூர் தொகுதியில் போட்டியிடுகின்ற அன்பு மகள் வித்யாராணிக்கு வாக்களித்து வெற்றி அடைய செய்யுங்கள். பிரபாகரன் என்றால் தீவிரவாதி, வீரப்பன் என்றால் சந்தன கட்டைகளை கடத்தியவன், மாயாவி திருடன் என்று கட்டமைப்பார்கள். வீரப்பன் என்று சொல்லும் போதும், பிரபாகரன் என்று சொல்லும் போதும் மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

வீரப்பன் வெளியே வந்து உண்மையை சொன்னால், பல பேருடைய ரகசியம் வெளிவரும் என்று அவரை காட்டுக்குள்ளே வைத்து மோரில் விஷம் வைத்து கொன்று விட்டனர். மோதி வெல்லாமல் மோரில் விஷம் வைத்த கொன்று, பீற்றிக்கொண்ட கோழைகள் இந்த நாட்டில் இருக்கின்றனர். வீரப்பனை கொன்றது எங்கள் ஆட்சி தான் என்று அதிமுக சொல்ல முடியுமா? வீரப்பன் இந்த நாட்டின் வனக்காவலன். அவன் உயிரோடு இருக்கும் வரை 6 ஆயிரம் சதுர கிலோமீட்டர், ஒரு கர்நாடகா காக்கைகள் கூட உள்ளே வந்ததில்லை. அவன் இறந்த பிறகு, ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

Tags : AIADMK ,Veerappan ,Seeman ,Mecheri ,Naam Tamilar Katchi ,Vidya Rani ,Mettur ,Salem ,
× RELATED ஒரே கூட்டணியில் இருப்பதால் சமரசம்...