- அஇஅதிமுக
- தில்லி
- ஜெயலலிதா
- அமைச்சர்
- சிவசங்கர்
- சென்னை
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- திமுக
- போக்குவரத்து அமைச்சர்
சென்னை: திமுக கூட்டணி ஓர் அடிமை கூட்டணி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக என்பதையே ‘அடிமை திமுக’ என்று பெயர் மாற்றுகின்ற அளவிற்கு கொண்டு சென்றுவிட்டார் எடப்பாடி. அமித்ஷா கொடுக்கும் ஸ்கிரிப்ட்டை மாற்றிக் கூட படிக்காமல் அப்படியே படிக்கிறார்.
மோடியா லேடியா என்று கேட்டு தேசிய கட்சியான பாஜவிற்கு சவால் விட்டவர் மறைந்த ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு மோடிதான் எல்லாம் என்று சொல்லி மறைந்த ஜெயலலிதாவுடைய ஆன்மாவையே சாகடிக்கின்ற அளவிற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுவிட்டார். கூட்டணி கட்சி தலைவர்கள் திமுகவில் அடிமையாக இல்லை. சுதந்திரமாக செயல்படுகின்ற கூட்டணியாக இந்த கூட்டணி இருக்கிறது.
நாங்கள் எப்பொழுதுமே கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு குழு அமைத்து, அந்த குழு கூட்டணிக் கட்சி தோழர்களோடு பேசி முடிவை அறிவிப்பது என்பது காலகாலமாக இருந்து வருகின்ற மரபு. அந்த அடிப்படையில்தான் கூட்டணிக் கட்சியினரோடு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றோம். அதேபோல தேர்தல் அறிக்கை என்பது நாங்க உட்கார்ந்த இடத்துல வெளியிடுற அறிக்கை கிடையாது.
அதிமுக வந்து திமுகவுடைய கடந்த கால தேர்தல் அறிக்கையையும், ஆட்சியினுடைய சாதனையையும் ஜெராக்ஸ் எடுத்து வச்சுக்கிட்டு, அதுல இண்டு டூ, ஸ்கொயர் டூ இதெல்லாம் போட்டுதான் வெளியிட்டு இருக்காங்க. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, எல்லா பொதுமக்களிடத்திலே கூட கருத்துகளை கேட்டு வந்து, அவற்றை தொகுத்து முதலமைச்சரிடத்திலே வழங்கி தேர்தல் அறிக்கை வெளியிடப் போகிறோம்.
தேர்தல் அறிக்கையில் சொல்லாத புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் மக்கள் அறிவார்கள். விசிகவிற்கு அதனால் எந்த மனவருத்தமும் இல்லை. நாங்கள் ஒவ்வொரு தேர்தலாக போட்டியிட்டு அந்த போட்டியின் அடிப்படையில் கூடுதல் இடங்களை பெற்று வருகிறோம் என்று மிகத் தெளிவாக திருமா இதற்கு பதிலளித்திருக்கிறார்.
எந்த கட்சிக்கு தேவையோ அவர்கள் அவர்கள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். அதிமுகதான் டெல்லியின் கட்டுப்பாட்டில் இயங்கும் கட்சி. திமுக கூட்டணியில் எந்தக் கட்சிக்கும் சின்னம் திணிக்கப்படவில்லை. விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் சொந்தச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த அதிருப்தியும் இல்லை என அதன் தலைவர் திருமாவளவனே தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வாறு தெரிவித்தார்.
