×

திமுக தலைமையிலான அணியில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை? முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்

சென்னை: திமுக தலைமையிலான அணியில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகள், தேமுதிகவுக்கு 10 தொகுதிகள், விசிகவுக்கு 8 தொகுதிகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 (3 உதயசூரியன் சின்னம்),

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 தொகுதிகள் (ஏணி சின்னம்), மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதிகள் (உதயசூரியன் சின்னம்), கொமதேகவுக்கு 2 தொகுதிகள் (உதயசூரியன் சின்னம்) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல எஸ்டிபிஐ கட்சி, மஜக, முக்குலத்தோர் புலிப்படை என 3 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பான பட்டியலை அந்தந்த கட்சிகள் சார்பில் திமுக தொகுதிப் பங்கீடு குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் வழங்கினர். இதே போல தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பான ஆலோசனை நேற்று நடந்தது.

இதில் கூட்டத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா நேரடியாக பங்கேற்று, திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை என்பது தொடர்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதே போல விசிக சார்பில் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்துள்ளார். மதிமுக சார்பில் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் தலைமையிலான நிர்வாகிகள் விருப்ப தொகுதிகள் பட்டியலை அளித்தனர்.

இதேபோல், கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளை அடையாளம் காண்பதற்காக, மமக தலைவர் ஜவாஹிருல்லா தலைமையிலான குழுவினர், திமுக குழுவிடம் விருப்ப தொகுதிகள் பட்டியலை வழங்கினர். மேலும் கொமதேக பொதுச்செயலாளர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் எவை என்பது தொடர்பாக பட்டியலை அளித்துள்ளனர். இதே போல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் வழங்கியுள்ளது.

மேலும் எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை கட்சியும் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அளித்துள்ளது.  கூட்டணி கட்சியினர் வழங்கியுள்ள பட்டியலை ஆராய்ந்து தொகுதி பங்கீட்டு குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்துள்ளனர். இதனால், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக மீதமுள்ள தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தேர்தல் அறிக்கையையும் வெளியிட திமுக தயாராகி வருகிறது.

Tags : DMK ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu Assembly ,Congress party ,DMDK ,
× RELATED ஒரே கூட்டணியில் இருப்பதால் சமரசம்...