சென்னை: தமாகா வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்ற ஜி.கே.வாசனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா மாவட்ட தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகா இடம்பெற்றுள்ளது. குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் பேச்சுவார்த்தைக்கு செல்வதை ஜி.கே.வாசன் புறக்கணித்தார். இதையடுத்து, சென்னை வந்த ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலிடம் நள்ளிரவு முறையீட்டு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த 5 தொகுதிகளிலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் தமாகா வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இந்த தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தியும் அதை ஜி.கே.வாசன் மறுத்து தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிச்சாமி, தமாகாவுக்கு ஒட்டன்சத்திரம், கும்பகோணம், ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஈரோடு மேற்கு ஆகிய 5 தொகுதிகளை ஒதுக்கினார்.
இந்த தொகுதிகள் எல்லாம் திமுகவின் கோட்டையாக கருதக்கூடிய 3 அமைச்சர்கள் போட்டியிடக் கூடிய தொகுதிகள். கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெறக்கூடிய தொகுதி. இப்படிப்பட்ட தொகுதிகளை எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கியதால் அவர் தமாகாவை பழி வாங்கிவிட்டதாக கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. வெற்றி பெறக்கூடிய ஒரு தொகுதியை கூட கேட்டு பெறவில்லை எனறு ஜி.கே.வாசன் மீதும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இந்நிலையில், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முக்கிய கட்சியான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாமல் தாமரை சின்னத்தை தேர்வு செய்ததால், ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர். குறிப்பாக நேற்று தமாகா மாவட்ட தலைவர்கள் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பிஜூ சாக்கோ, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் ஆகியோர் கட்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பிஜூ சாக்கோ நிருபர்களிடம் கூறியதாவது: என்டிஏ கூட்டணியில் 5 தொகுதிகளை பெற்று, தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன? இந்த முடிவை கட்சியோ, பொதுக்குழுவோ சேர்ந்து எடுத்த முடிவாக தெரியவில்லை. ஜி.கே. வாசனின் தனிப்பட்ட முடிவாகத்தான் தெரிகிறது. சென்னையிலும், காஞ்சிபுரத்திலும் அதிமுகவிடம் இருந்து ஒரு கவுன்சிலர் சீட் கூட ஜி.கே.வாசனால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை.
இந்த 5 தொகுதிகளில் ஏதாவது வெற்றி பெறும் தொகுதி இருக்கிறதா?. ஒரு தொகுதியில் கூட தமாகா வேட்பாளர்கள் வெற்றி பெற மாட்டார்கள். என்.டி.ஏ. கூட்டணி, பாஜக என தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்று சொல்வதில் எங்களுக்கு பிரச்னை இல்லை.
ஆனால், தமிழ்நாட்டில் பெரிய கட்சியான அதிமுகவின் இரட்டை இலையில் நிற்கலாம் எனும் விருப்பம் தான் பெரும்பான்மையானோருக்கு இருக்கும். ஆனால் இவர் ஏன் தாமரையை தேர்ந்தெடுத்தார் என்பது புரியாத புதிராக உள்ளது. தாமரை சின்னத்தில் நின்று விட்டு நாளை உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் எப்படி சீட் வாங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.
