×

எடப்பாடியுடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு: சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு சீட்?

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேற்று காலை புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வந்தார். கூட்டணியில் தங்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள் மற்றும் தொகுதிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். ஏ.சி.சண்முகம், பாஜ தலைமையிலான கூட்டணியில் இருந்தாலும், அதிமுகவுடன் பேசி சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களை பெறவோ அல்லது தேர்தல் வியூகங்கள் குறித்தோ இந்த சந்திப்பு அமைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இவரை தொடர்ந்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனும் எடப்பாடியை சந்திக்க அவரது இல்லத்திற்கு வந்தார். ஏற்கனவே ஜான் பாண்டியனுக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், தேர்தல் பணி மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ராயப்பேட்டைஅதிமுக தலைமை அலுவலகத்தில், எடப்பாடியை, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பரதன் சந்தித்து பேசினார்.

அப்போது இரு கட்சிகளுக்கும் இடையிலான தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த சி.த.மு.க தலைவர் பரதன் கூறும்போது, ‘‘ சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிமுக தரப்பில் மண்ணச்சநல்லூர் அல்லது ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை எங்களுக்கு ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழக வேட்பாளர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே போட்டியிடுவார்” என்றார். ஆனாலும் அதிமுக தரப்பில் ஏ.சி.சண்முகம் கட்சிக்கோ அல்லது சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகத்திற்கோ தொகுதி ஒதுக்கீடு குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

Tags : A.C. Shanmugam ,Edappadi ,Tamilar Munnetra Kazhagam ,Chennai ,New Justice Party ,AIADMK ,General ,Edappadi Palaniswami ,Greenways Road ,BJP… ,
× RELATED ஒரே கூட்டணியில் இருப்பதால் சமரசம்...