சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது சம்பந்தமாக பாஜவை சேர்ந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்தார்.
இந்த புகார் மனு, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவை விசாரித்த நீதிபதி சவுந்திர பாண்டியன், புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார். வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிமன்ற முடிவையும், சம்மன் அனுப்பியதையும் எதிர்த்து பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, புகாரில் வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற தங்கள் தரப்பு வாதத்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்கவில்லை. இரு தரப்புக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை மனுதாரருக்கு இல்லை என்றும் வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு குறித்து உமா ஆனந்தன் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
