சென்னை: அதிமுக சார்பில் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பாஜவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒரு சிலர் தற்போது வேலையை தொடங்கிவிட்டனர். சென்னையில் திருவிக நகர், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் ஆகிய 3 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அண்ணாநகர் தொகுதியில் கோகுல இந்திரா போட்டியிட உள்ளதாகவும், திரு.வி.க.நகரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் போட்டியிடும் அதிமுக உத்தேச வேட்பாளர்கள் விவரம்: திருவொற்றியூர் (கார்த்திக் குப்பன்), ஆர்.கே.நகர் (ராஜேஷ்), கொளத்தூர் (கிருஷ்ணமூர்த்தி), வில்லிவாக்கம் (திருமங்கலம் மோகன்), எழும்பூர் (அபிஷேக் ரங்கசாமி), துறைமுகம் (பாலகங்கா), சேப்பாக்கம் திருவல்லிக்கேணி (ஆதி ராஜாராம்), வேளச்சேரி (அசோக்), விருகம்பாக்கம் (வி.என்.ரவி), தி.நகர் (சத்யா), ஆயிரம்விளக்கு (வளர்மதி), ஆலந்தூர் (ஏசுபாதம்), அண்ணாநகர் (கோகுல இந்திரா), திரு.வி.க.நகர் (பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்) போட்டியிட சீட் வழங்க வாய்ப்புள்ளது.
ராயபுரம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பெயரை கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதேபோல, அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் கடந்த முறை போட்டியிட்டு வென்ற திருநெல்வேலி தொகுதியும் பாஜவிற்கு வழங்கப்படவில்லை. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜ வென்ற 4 தொகுதிகளில், 2 தொகுதிகளில் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாஜ சார்பில் அறிவிக்கப்பட உள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளன. கடந்த முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்ற பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்முறையாக சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே போல் அண்ணாமலை போட்டியிடுவதற்கு ஏதுவாக பல்லடம் தொகுதியை ஒதுக்க அதிமுக முன்வந்தது. ஆனால், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கோயம்புத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையத்தை அவர் தேர்வு செய்தார்.
ஆனால், இரண்டு தொகுதிகளுமே பாஜவிற்கு கிடைக்கவில்லை. இதனால் அவர் இந்த தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவார். அங்கு வானதிக்கு ஒதுக்கப்பட்டால், அவர் போட்டியிடாமல் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு சீட் கிடைக்க கூடாது என்று நயினார் திட்டமிட்டே வேலை பார்த்ததாகவும் அண்ணாமலை ஆதரவாளர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, திருப்பூர் தெற்கு தொகுதியில் இந்து முன்னணி கட்சியின் தலைவர் காடேஷ்வர சுப்ரமணியத்தின் மகனான காடேஷ்வர தங்கராஜ் களமிறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவினாசி தனி தொகுதியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனும், மொடக்குறிச்சியில் தற்போதைய எம்.எல்.ஏவான சரஸ்வதியின் உறவினரையும் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை கோவை தெற்கில் வென்ற வானதி ஸ்ரீனிவாசன் இந்த முறை கோவை வடக்கில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் கடந்தமுறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட பாஜவிற்கு இந்த முறை மயிலாப்பூர் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் துறைமுகம் தொகுதி தங்களுக்கு தான் கிடைக்கும் என்று பணியாற்றி வந்த பாஜ மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், வேளச்சேரி தொகுதி தனக்கு தான் போட்டியிடும் இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா ஆகியோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல் மற்றும் பத்மநாதபுரம் ஆகிய 4 தொகுதிகள் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் குளச்சல் மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் நேரடியாக பாஜ காங்கிரசை எதிர்கொள்கிறது. அதன்படி விளவங்கோட்டில் விஜயதரணி போட்டியிட உள்ளார். வாசுதேவநல்லூரில் ஆனந்தன் அய்யாசாமியும், நாகர்கோவிலில் தற்போதைய எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி அல்லது மீனாதேவ், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தமும், ராமநாதபுரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பாஜவின் உத்தேச வேட்பாளர் பட்டியலில் மயிலாப்பூர்- தமிழிசை சவுந்தரராஜன், தளி- நரேந்திரன்/அமர்பிரசாத் ரெட்டி, மொடக்குறிச்சி – தற்போதைய எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகள் காயத்ரி, அவிநாசி – எல்.முருகன், திருப்பூர் தெற்கு – ஏ.பி.முருகானந்தம் அல்லது காடேஷ்வர தங்கராஜ், கோவை வடக்கு – வானதி ஸ்ரீனிவாசன், கந்தர்வகோட்டை- புரட்சி கவிதாசன், திருப்பத்தூர்- ராமேஸ்வரன், மதுரை தெற்கு – ராம சீனிவாசன், சாத்தூர் – நயினார் நாகேந்திரன்,
திருச்செந்தூர் – கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் – ஆனந்தன் அய்யாசாமி, நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி அல்லது மீனாதேவ், விளவங்கோடு – விஜயதரணி, ஆவடி- அஸ்வின், திருவண்ணாமலை அஸ்வத்தாமன், தஞ்சாவூர் – கருப்பு முருகானந்தம், திருவாரூர் – கோவி சந்துரு அல்லது சந்திரசேகர், அறந்தாங்கி – லண்டன் ராமசாமி அல்லது கவிதா ஸ்ரீகாந்த், மானாமதுரை – பொன் பாலகணபதி, ராமநாதபுரம் – பொன் ராதாகிருஷ்ணன், குளச்சல் – தர்மராஜ்,
பதம்நாபபுரம் – பவானி எட்வின் ஜோஸ் அல்லது உன்னி கிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக தகவல் வௌயாகியுள்ளது. இதேபோல ராசிபுரம், உதகமண்டலம், புதுக்கோட்டை, ராதாபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட கடும் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
