×

குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் சிறுத்தை கூண்டில் சிக்கியது

கோபி: கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் அடுத்தடுத்து கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை பிடிபட்டது. கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனசரகத்திற்கு உட்பட்ட குண்டேரிப்பள்ளம் அணை பகுதியானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு ஏராளமான சிறுத்தை, புலிகள் உள்ளன. கடந்த 6 மாதங்களாக வன பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று அப்பகுதியில் உள்ள கால்நடைகளை வேட்டையாடி வந்தது. அதைத்தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து கால்நடைகள் உயிரிழந்த பகுதியில் வனத்துறையினர் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்த போது, சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க அனுமதி பெற்ற வனத்துறையினர், அப்பகுதியில் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை மூர்த்தி என்பவரது தோட்டத்திற்கு வந்த சிறுத்தை அங்கு வனத்துறையினர் வைத்து இருந்த கூண்டில் சிக்கியது.

சிறுத்தை பிடிபட்ட தகவலை தொடர்ந்து அங்கு வந்த டி.என்.பாளையம் வனசரகர் ஜான் பீட்டர், வனவர் கலைச்செல்வன், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர், உடனடியாக சிறுத்தை பிடிபட்ட இடத்திற்கு வந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். அதனைத்தொடர்ந்து கால்நடை மருத்துவரை அழைத்து சிறுத்தையை பரிசோதனை செய்து பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.பல மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை பிடிபட்டது, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : Kunderipallam dam ,Gopi ,D.N. Palayam forest reserve ,Sathyamangalam Tiger Reserve ,
× RELATED ஊத்துக்கோட்டை-சத்தியவேடு சாலையில்...