சென்னை: தமாகா போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், தமாகாவை அதிமுக-பாஜக பழி வாங்கி விட்டதாக கூறி கட்சியினர் அக்கட்சிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணி முடிவடைந்துவிட்டது. இதையடுத்து, கூட்டணி கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இதனால் இன்று அல்லது நாளைக்குள் என்டிஏ கூட்டணி கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் பெரும்பாலானவை திமுக வெற்றி பெறக்கூடிய தொகுதிகளாக இருப்பதாக கூட்டணி கட்சியினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவுக்கு அதிமுக 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்தது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஜி.கே.வாசன் பாஜ மேலிட தலைவர்களிடம் தனது அதிருப்தியை தெரிவித்ததோடு பேச்சுவார்த்தையையும் புறக்கணித்தார். இதைதொடர்ந்து பியூஸ் கோயல், எடப்பாடி பழனிச்சாமியிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த தொகுதிகளில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியும், ஜி.கே.வாசன் அதை மறுத்து தாமரை சின்னத்தில் போட்டியிடப் போவதாக தெரிவித்தார். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் 3 திமுகவின் கோட்டையாக இருக்கக்கூடிய அமைச்சர்கள் போட்டியிட தொகுதியாகும். மேலும் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தொகுதியாகும். ஈரோடு மேற்கு தொகுதி திமுக செல்வாக்கு பெற்ற தொகுதியாகும்.
ஆக, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கோட்டையாக இருக்கக்கூடிய தொகுதிகளை தமாகாவுக்கு ஒதுக்கியது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பழி வாங்கி விட்டதாக கட்சியினர் கருதுகின்றனர். பொதுவாக கூட்டணி கட்சியினர் எப்போது தங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதி பட்டியலை கொடுப்பார்கள், அதில் இருந்து ஒன்று இரண்டு ெதாகுதிகளையாவது ஒதுக்குவார்கள். ஆனால் தமாகாவுக்கு, அதிமுக நேரடியாக 5 தொகுதிகளை ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
தற்போது தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில், யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது அதற்கான உத்தேச வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒட்டன்சத்திரம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் போட்டியிட வாய்ப்புள்ளது. ஈரோட்டை சேர்ந்தவர் என்றாலும் தமாகாவில் நீண்ட காலமாக பயணித்து வருபவர். அவருக்கு ஈரோடு மேற்கு தொகுதியை ஒதுக்கலாம். ஆனால், அந்த தொகுதியில் யுவராஜ் அதிமுகவிடம் தான் கேட்டு அந்த தொகுதியை வாங்கியிருப்பதாக கூறி ஈரோடு மேற்கு தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார்.
அடுத்ததாக ராணிப்பேட்டை தொகுதியில், மாவட்ட தலைவர் கார்த்திக் என்பவர் போட்டியிட வாய்ப்புள்ளது. கிள்ளியூர் தொகுதியில், மறைந்த முன்னாள் எம்எல்ஏ ஜான் ஜேக்கப் மகன் நிதின் சைமன் போட்டியிட வாய்ப்புள்ளது. கும்பகோணம் தொகுதியில் அசோக் என்பவர் போட்டியிட வாய்ப்புள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தமாகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
