×

ஆடாதடா ஆடாதடா மனிதா; அண்ணாமலைக்கு நேர்ந்த கதி: வச்சி செஞ்ச எடப்பாடி?

கோவை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில், கோவையில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை அதிமுக கூட்டணியில், கோவை தெற்கு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை கூடுதலாக ஒரு தொகுதி பெற்றுவிட வேண்டும். அதில், அண்ணாமலையை களம் இறக்க வேண்டும் என உள்ளூர் பாஜவினர் தீவிரமாக இருந்தனர். ஆனால் பாஜகவிற்கு கணிசமான வாக்கு வங்கியுள்ள கோவை மாவட்டத்தில் வெறும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவார் என கூறப்பட்டது. இதற்கேற்ப கட்சி சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன் என அவரும் கூறி வந்தார். மேற்கண்ட இரு தொகுதிகளிலும் தொடர்ந்து தலைகாட்டி வந்தார். ஆனால் தொகுதி பங்கீட்டில் கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதால், வானதி சீனிவாசன் மட்டுமே போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் அண்ணாமலைக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது தனி ஆவர்த்தனம் செய்து வந்த அண்ணாமலை, கடந்த சில மாதங்களாகவே பாஜகவால் ஓரங்கட்டப்பட்டு வருகிறார். மேலும் சொத்து குவிப்பு, ரியல் எஸ்டேட் வியாபாரம் போன்ற சர்ச்சைகளிலும் சிக்கிய அவர், தனிக்கட்சி ஆரம்பிக்கலாம் என்ற தகவலும் வெளியானது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி பணம் ரயிலில் கைப்பற்றப்பட்ட விவகாரத்திற்கு அண்ணாமலையே காரணம் என கூறப்படும் நிலையில், இருவருக்கும் இடையே பனிப்போர் வலுத்து வந்தது. இதேபோல குறுகிய காலத்தில் அண்ணாமலையின் வளர்ச்சியை, வானதி சீனிவாசன், எல்.முருகன் போன்றவர்களும் ரசிக்கவில்லை.

இதனிடையே தேர்தலுக்கு தயாராகும் வகையில் சிங்காநல்லூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து, தந்தையின் உடல் நிலையை காரணம் காட்டி அண்ணாமலை விலகினார். இந்த நிலையில் வானதி சீனிவாசன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன் அணிகள் அண்ணாமலைக்கு எதிராக தொடர் புகார்களை டெல்லி தலைமைக்கு அனுப்பி வந்தனர். பாஜகவிற்கு கணிசமான வாக்கு வங்கியுள்ள கோவையில் அண்ணாமலைக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த மற்ற கோஷ்டிகள், அண்ணாமலையின் சொந்த மாவட்டமான கரூரில் நின்று வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டுமென தெரிவித்தனர்.

ஏற்கனவே அண்ணாமலை அதிமுக தலைவர்களை இழிவாக பேசியது, எடப்பாடி பழனிசாமியை தற்குறி என விமர்சனம் செய்தது போன்றவை எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தன. இதனால் அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்த வரை பாஜ உடன் கூட்டணி சேராத எடப்பாடி பழனிசாமி, அவரை மாற்றிய பிறகே கூட்டணி அமைத்தார். தற்போது அண்ணாமலையின் அடாவடியான பேச்சிற்கு பதிலடியாக, அண்ணாமலைக்கு சீட் கிடைக்காத வகையில் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீட்டை முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக மாநிலத் தலைமை மற்றும் அதிமுக தலைமை இணைந்து தனக்கு சீட் இல்லை என்று கூறினால், தான் கட்டமைத்து வைத்துள்ள, ‘மாஸ் இமேஜ்க்கு’ சேதங்களை ஏற்படுத்தும் என்பதால், தானாகவே தேர்தலில் போட்டியிடாமல் விலகியது போன்ற தோற்றத்தை உருவாக்க அண்ணாமலை முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags : Aadada Aadada Aadada ,Goa ,Tamil Legislative Assembly ,BJP ,Adimuka Khattani ,Supreme Alliance ,
× RELATED பாஜக வேட்பாளர் யார் என்பதை டெல்லி...