×

நலன் தரும் ஸ்ரீராம நவமியும் பார் போற்றும் பங்குனி உத்திரமும்

ஸ்ரீராம நவமி (27.3.2026) பங்குனி உத்திரம் (1.4.2026)
முத்துக்கள் முப்பது

1. முன்னுரை

பங்குனியும் சித்திரையும் கலந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வரும் அற்புதமான இரு நிகழ்வுகள் ஸ்ரீராம நவமியும் பங்குனி உத்திரமும். இந்த ஆண்டு ஸ்ரீராம நவமி மார்ச் மாதம் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு ஆலயங்களில் பெருவிழாவாக நடக்க இருக்கிறது. சில ஆலயங்களில் கர்ப்ப உற்சவமாக 27-ஆம் தேதிக்கு முன்னால் 10 நாட்கள் நடைபெற்று, 27-ஆம் தேதி முடிவடையும். ஸ்ரீராமநவமி உலகமெங்கும் கொண்டாடப்படும் உற்சவமாகும்.

அடுத்து 4 நாட்களில் பங்குனி பௌர்ணமி வருகிறது. பங்குனி பௌர்ணமியும் உத்திர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் நாடெங்கும் பங்குனி உத்திர விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும் லட்சக்கணக்கான மக்கள் கொண்டாடும் ஆன்மிகப் பெருவிழா என்பதால், அடுத்தடுத்து வரும் இந்த இரண்டு விழாவின் தத்துவங்களையும் சிறப்புகளையும் முப்பது முத்துக்களாகக் காண்போம். முதலில் ஸ்ரீராம நவமி வைபவத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

2. இரண்டு அவதாரங்கள்

எம்பெருமான் அவதாரங்களில், மண்ணுய்ய, மண்ணில் மனிதருய்ய எடுத்த பல்வேறு அவதாரங்களில் 10 அவதாரங்கள் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன. அந்த பத்து அவதாரங்களிலும் இரண்டு அவதாரங்கள் பூரணமான அவதாரங்களாகக் கருதப்படுகின்றன. ஒன்று திரேதா யுகத்தில் எடுத்த ஸ்ரீராம அவதாரம். மற்றொன்று துவாபர யுகத்தில் எடுத்த கிருஷ்ணாவதாரம். இந்த இரண்டு அவதாரங்கள் தான் ஸ்ரீராம நவமி உற்சவமாகவும், ஸ்ரீ ஜயந்தி உற்சவமாகவும், கொண்டாடப்படுகின்றன. சித்திரையில் ஸ்ரீராமனும், ஆவணியில் ஸ்ரீ கிருஷ்ணனும் அவதரித்தனர். ஒரே சந்திரன்
15 நாட்கள் தேய்பிறை ஆகவும் 15 நாட்கள் வளர்பிறை ஆகவும் இருப்பதுபோல, எம்பெருமான், ஒரு அவதாரத்தை வளர்பிறை நவமியிலும், மற்றொரு அவதாரத்தை தேய்பிறை
அஷ்டமியிலும் எடுத்தார்.

3. நடத்தையில் நின்றுயர் நாயகன்

புராணங்களும் இதிகாசங்களும் தர்மத்தையும் நல்வாழ்க்கையையும், அதனால் கிடைக்கும் நன்மையையும் வலியுறுத்த வந்தவை. மனிதன் அற வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவே, புராண இதிகாசங்கள் எழுந்தன. பகவானே அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டினார். கம்பன் ராமனைப் பற்றிப் பாடுகின்ற பொழுது நடத்தையில் நின்றுயர் நாயகன் என்று போற்றுகின்றார். கிருஷ்ணாவதாரத்தில் நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள்.

ராமாவதாரத்தில் ஒருவர் தவம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார். யசோதை, நந்தகோபன், தேவகி, வசுதேவர் ஆகிய நால்வர் தவம்செய்து கண்ணன் அவதரித்தான். ஆனால், தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால், அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. அறத்தின் நாயகனான ராமன் குணங்கள்தான் ராமாயணம். அந்தப் பரம்பொருளை உணர்வதுதான் ராமாயணம் தெரிந்து கொள்வதன் நோக்கம். ஸ்ரீ ராமநவமியின் நோக்கம்.

4. நான்கு வகை தர்மங்கள்

ராமாயணத்தை ஒரு கதையாகப் படிக்காமல், தத்துவத்தைப் படிப்பதன் மூலம்தான் முழுமையான பலன் பெற முடியும். அதனால்தான் நம்மாழ்வார், ‘‘கற்பார் ராமாயணத்தை அல்லால் மற்றும் கற்பரோ” என்று சொல்லாமல், ‘‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று பாடினார். தர்மத்தை காப்பதற்காக பகவானே தசரதனுக்குப் பிள்ளைகளாக அவதரித்தான். தர்மம் நான்கு வகைப்படும்.

1. சாமானிய தர்மம்,
2. சேஷ தர்மம் ,
3. விசேஷ தர்மம்,
4. விசேஷதர தர்மம்.

5. நாலுபேர், நான்கு வகை தர்மம்

தாய் தந்தையிடமும் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற தர்மம் “சாமான்ய தர்மம்”. இதை ராமன் அனுஷ்டித்துக் காட்டினான். இரண்டாவதாக, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்கின்ற தொண்டுள்ளம் கொண்டவனாக, பதினான்கு ஆண்டுகள் தூங்காமல் (துஞ்சமில் நயனத்தான்) பகவானுக்குக் குற்றேவல் புரிந்தான் இலக்குவன். இது “சேஷ தர்மம்”. எப்பொழுதும் பகவானையே நினைத்துக் கொண்டு, பகவான் சொல்லியதை செய்தான் பரதன். இது “விசேஷ தர்மம்”. இறைவனுக்குத் தொண்டு செய்வதை விட இறை அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முதன்மையானது என்று பாகவத சேஷத்வத்தைக் காட்டினான் சத்ருக்கனன். இது “விசேஷதர” தர்மம்.

6. ஸ்ரீ ராமாயணம் ஒரு வாழ்க்கை முறை

வைணவ சமய மரபில் ஸ்ரீ ராமாயணம் வேதமாகப் போற்றப்படுகிறது. வேதம்தான் ராமன். வேதம் காட்டும் மறைபொருள்தான் ராமாயணம்.
வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசராத்மஜே I
வேத: ப்ரசேதசாதாஸீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா II
இந்த ஸ்லோகத்தின் பொருள் இதுதான்.

“வேதங்களினால் அறியப்படும் இறைவன் தசரதனின் புதல்வனாகப் பிறந்தான்; வேதம் ப்ரசேதஸ் (வால்மீகி) முனிவரிடமிருந்து) ராமாயண மாகப் பிறந்தது” என்பது இதன் பொருள்.

7. வாழ்ந்து காட்டியவன் ஸ்ரீராமன்

வைணவத் தத்துவத்தை நிலைநிறுத்த வந்த ஸ்ரீ ராமானுஜரை ‘‘படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் ராமானுஜன்” என்று திருவரங்கத்தமுதனார் தமது ராமானுஜ நூற்றந்தாதியில் போற்றுகின்றார். ராமானுஜருக்கு ஐந்து ஆச்சாரியர்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு தத்துவத்தைப் பெற்றுக் கொண்டார். அதில் தம் தாய்மாமனான பெரிய திருமலை நம்பிகளிடம் ஒரு வருட காலம் ராமாயணத்தைப் பயின்றார், என்பதிலிருந்து அது வெறும் புராணக் கதை அல்ல, தத்துவச்சாறு என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஸ்ரீ ராமாயணம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அந்த முறையை வாழ்ந்து காட்டியவன் ஸ்ரீராமன்.

8. காயத்ரி மந்திரமும் ஸ்ரீ ராமாயணமும்

காயத்ரி மந்திரம் மனிதனின் அறிவைத் தூய்மைப்படுத்தும் வேத மந்திரமாகவும், ஸ்ரீ ராமாயணம் தர்ம வாழ்க்கையை எடுத்துரைக்கும் இதிகாசமாகவும் சொல்வார்கள். இவ்விரண்டும் இணைந்து மனிதனை ஆன்மிக உயர்வுக்கும் நல்லொழுக்க வாழ்க்கைக்கும் வழிகாட்டுகின்றன. ஆகவே, காயத்ரி மந்திரமும் ஸ்ரீ ராமாயணமும் இந்திய ஆன்மிக பாரம்பரியத்தின் முக்கியமான தூண்களாகக் கருதப்படுகின்றன.

சகல வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரத்திற்கும், ஸ்ரீ ராமாயணத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்கள். ராமாயணத்திற்கு 24,000 ஸ்லோகங்கள். ஒவ்வொரு அட்சரத்துக்கு 1000 ஸ்லோகங்கள் என்ற வகையில் 24 ஆயிரம் ஸ்லோகங்களை வான்மீகி செய்தார். இதைப்போலவே, நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், ராமாயண சாரத்தைச் சொல்வதால், அதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை ராமாயணத்திற்கு நிகராக 24000 படி உரை எழுதினார்.

9. உலக சகோதரத்துவமே ஸ்ரீ ராமாயணம் காட்டும் நெறி

யுத்த காண்டத்தில், ராவணனை விட்டு விபீஷணன் சரணடைந்தபோது, ராமன் அவனைத் தன் உடன்பிறப்பாக ஏற்றுக் கொள்கிறான்.

குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு, பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை

– என்பது ராமாயணத்தின் உயிர்த் தத்துவமான உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தும் அற்புதமான பாடல். குகன், சுக்ரீவன், விபீஷணன் ஆகியோரைத் தம்பிகளாக ஏற்று, ராமன் தன்னை சகோதரர்களில் ஒருவனாகக் கூறும், அன்பையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் முக்கியக் காட்சி இது. ராமாயணம் மகாபாரதம் இரண்டும் ஒரே கருத்தைத்தான் சொல்லுகின்றன. உலக சகோதரத்துவத்தின் ஒற்றுமையைச் சொல்வது ராமாயணம். ராமாயணம் நேர்மறையாகச் சொல்கிறது. அதே கருத்தை எதிர்மறையாகச் சொல்லுகின்றது மகாபாரதம். அதனால்தான் “இதிகாசங்களில் சிரேஷ்டமானது ராமாயணம்” என்று பிள்ளை லோகாச்சாரியார் தம்முடைய ஸ்ரீ வசன பூஷணம் என்கின்ற நூலிலே சொல்லி வைத்தார்.

10. துன்பங்களைப் போக்கும் ஸ்ரீராமாயணம்

ராமபிரான் வைகுண்டத்துக்குச் செல்லுகின்ற போது எல்லோரையும் அழைத்துச் சென்றார் என்று நம்மாழ்வார் பாடுகிறார். வைகுண்டம் என்பது மேலேறுவது. மேல் நிலைக்குச் செல்வது. எல்லோரையும் உயரே ஏற்ற, கீழே இறங்க வேண்டும். கீழே இறங்குதல் தான் “அவதாரம்” ராமபிரான் அவதரிக்கக் காரணம், மற்றவர்களை மேல்நிலைக்கு அழைத்துச் செல்வதுதான். மோட்ஷம் என்பது மறு உலகம் என்று சொல்வதைப் போலவே விடுதலை பெறுதல் என்ற பொருளும் உண்டு.

எதிலிருந்து விடுதலை பெறுதல் என்றால், துன்பங்களிருந்து விடுதலை பெறுதல். அதனால்தான் துன்பங்களில் இருந்து விடுதலை பெற, பெரியவர்கள் ஸ்ரீ ராமாயண பாராயணம் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள். குறைந்தபட்சம் ஸ்ரீ ராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டத்தைப் பாராயணம் பண்ணினால், கஷ்டங்கள் தீரும். ராமனைப் பிரிந்த சீதையின் கஷ்டத்தையும், சீதையைப் பிரிந்த ராமனின் கஷ்டத்தையும் தீர்த்து வைத்த பகுதி சுந்தர காண்டம். இன்றும் இந்தியாவில் பல இடங்களில், உலகம் நல்லவிதமாக வாழவும், மழை பெய்யவும், பயிர்கள் செழிக்கவும் , மக்களின் துன்பங்கள் நீங்கவும், ராமாயணம் பாராயணம் செய்வதையும், ராமாயணக் கதை சொல்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

11. ஸ்ரீரங்கமும் ஸ்ரீராமாயணமும்

வைணவத்தில் கோயில் என்றால் அது திருவரங்கத்தைக் குறிக்கும். திருவரங்கத்திற்கும் ஸ்ரீராமாயணத்திற்கும் தொடர்பு உண்டு. இப்பொழுது ஸ்ரீரங்கத்தில் உள்ள மூல மூர்த்தியான ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஸ்ரீ ராமனாலும், அவருடைய முன்னோர்களாலும் வழிபடப்பட்ட பெருமாள். முதலில் பிரம்மாவால் பூசிக்கப்பட்டு, பிறகு அயோத்தியில் இஷ்வாகு வம்சத்தவர்களால் பூஜிக்கப்பட்டு, ஸ்ரீராமனால் பூஜிக்கப்பட்டு, பட்டாபிஷேகம் முடியும் பொழுது ஸ்ரீ ராமபிரான் அந்த மூர்த்தியை, பிரணவ விமானத்துடன், விபீஷணனுக்குக் கொடுக்க, அவர் இலங்கைக்குப் போகும் வழியில் திருவரங்கத்தில் நிறுவினார் என்பது தல வரலாறு. வைணவ மரபில் ஸ்ரீ ராமனை பெருமாள் ஆகவும், ஸ்ரீ ராமன் வழிபட்ட ஸ்ரீரங்கநாதப் பெருமானை பெரிய பெருமாளாகவும் போற்றும் வழக்கம் உண்டு. இந்த வரலாறைச் சொல்லும் பாசுரம்.

ஆராத அருள் அமுதம் பொதிந்த கோயில் –
அம்புயத்தோன் அயோத்தி மன்னற்கு அளித்த கோயில்
தோலாத தனி வீரன் தொழுத கோயில்
துணையான விபீடணற்குத் துணையாம் கோயில்
சேராத பயன் எல்லாம் சேர்க்கும் கோயில்
செழு மறையின் முதல் எழுத்துச் சேர்ந்த கோயில்
தீராத வினை யனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கம் எனத் திகழும் கோயில் தானே.

12. ஏழு பிரகாரமும் ஏழு காண்டமும்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பாகும் (சப்த பிரகாரம்), இது ஏழு உலகங்களையும், மனித உடலின் ஏழு சக்கரங்களையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பராசர பட்டர், ‘‘சப்த பிரகார மத்யே” எனத் தொடங்கும் ஸ்லோகத்தில், காவேரி நதிக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஏழு சுற்றுச் சுவர்களுக்குள் குடியிருக்கும் ரங்கநாதரை வணங்குகிறார். எப்படி திருவரங்கத்திற்கு ஏழு பிரதானமோ , அதைப்போல ராமாயணத்திற்கு ஏழு என்பது பிரதானம்.

1. ஏழாவது அவதாரம் ராம அவதாரம்.
2. ஏழு மரா மரங்களைத் துளைத்தான்.
3. ஏழு உலகங்களிலும் அவன் பெருமை பேசப்படுகிறது.
4. ஆறு தம்பிகளோடு சேர்ந்து ஏழு பேராக இருந்தான். (நின்னோடும் எழுவரானோம்).
5. ஏழு காண்டங்களில் ராமகதை சொல்லப்பட்டிருக்கிறது.

13. மக்களின் மனதில் ராமன்

ஒருவன் ஒழுக்கமாகவும், சகோதர ஒற்றுமையுடனும், வாழும்போது அவனை ஸ்ரீராமன் என்றே மக்கள் போற்றுவர். ஸ்ரீராமனை தங்கள் உன்னதமான வழிகாட்டியாக ஏற்றுவர். எல்லோருக்கும் நன்மை தரக்கூடிய உயர்ந்த அரசாட்சியை ஸ்ரீ ராமராஜ்யம் என்று போற்றும் வழக்கம் உண்டு. அது ஸ்ரீராமனுடைய ராஜ்ஜியம் என்பதை விட, மக்களுக்கான ராஜ்ஜியம் என்பது தான் உண்மையான பொருள்.
ஒரு அருமையான பாட்டு.

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!

இந்தப் பாட்டிலே ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி விளக்கப்படுகிறது. ராமருக்குப் பட்டாபிஷேகம் செய்தார்கள். சரி. இதில் ராமர் பெயர் இல்லையே? என்ன காரணம்? இதற்கு சுவையான விளக்கம் சொன்னார்கள், பெரியவர்கள். ராமர் சூடிய கிரீடம் தங்கள் தலைமேல் வைத்ததாகவே மக்கள் கருதினார்கள். எல்லா மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக ராமன் இருந்ததால், ராமன் பெயர். இதில் கம்பன் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்பது பெரியவர்கள் நிர்வாகம். இனி எந்தெந்த ஆலயங்களில் எப்படி ராமநவமி கொண்டாடப்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.

14. சேரகுலவல்லி சேர்த்தி உற்சவம்

திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருவரங்கத்திற்கு என்று தனிப் பஞ்சாங்க அடிப்படையில், திதி கணக்கின்படி கொண்டாடப்படுகிறது. ராமநவமி சித்திரை மாதத்தில், சுக்ல பட்ச நவமி திதியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நம்பெருமாள் சேரகுலவல்லித் தாயாருடன் சிறப்புச் சேர்த்தி சேவை மற்றும் திருமஞ்சனம் நடைபெறும். வைணவ சம்பிரதாயப்படி திதி கணக்கின்படி, ராம அவதார தினமான புனர்பூசம் நட்சத்திரத்தில், சிறப்பு ஆராதனைகள் மற்றும் ராமர் வழிபாடுகள் இங்கு நடைபெறும்.

குலசேகர ஆழ்வார் தமது கடைசிப் பதிகமான பெருமாள் திருமொழியில் ராமாயணம் முழுமையும் 11 பாசுரங்களால் அரங்கேற்றிய சிதம்பரம் (திருச்சித்ரகூடம்), பட்டாபிராமர் சந்நதியில், ஸ்ரீராம நவமி கர்ப்ப உற்சவமாக, 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருமலை ஒண்டி மிட்டா ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி வரை ஸ்ரீராம நவமி பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது.

15. பத்ராசலம் ஸ்ரீராமநவமி

தெலுங்கானாவில் உள்ள பத்ராசலம் ஸ்ரீ சீதா ராமசந்திரமூர்த்தி திருக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராமநவமி உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சீதா ராம கல்யாண மஹோத்ஸவம், தாளம்பிரலு (அட்சதை) சாற்றுதல் நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி, ராமர் பிறந்த நட்சத்திரமான புனர்பூச நாளில் இந்த தெய்வீகத் திருமணத்தைக் கண்டு மகிழ்வார்கள்.

ராமநவமி தினத்தில், (27.3.2026) மதியம் 10 மணி முதல் 12:30 மணி வரை சீதாராம கல்யாண உற்சவம் நடைபெறும், மதியம் சரியாக 12 மணிக்கு புனித அட்சதை (தாளம்பிரலு) தூவும் நிகழ்வு முக்கிய நிகழ்வாகும். ராமருக்கு ஆலயம் கட்டிய ராமதாசர் எனப்படும் கோபண்ணா தனது சிறைத் தண்டனையின்போது இடைவிடாமல் ராமனைத் துதித்துப் பாடிய ‘தாசரதி சதகம்’ என்னும் கீர்த்தனைகள் இன்றளவும் இசைக்கப்பட்டு வருகின்றன. பக்த ராமதாஸ் பாடல்களால் ஈர்க்கப்பட்டு, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் நேரில் பத்ராசல ராமரைத் தரிசித்துச் சில பாடல்களை இயற்றியுள்ளார்.

16. தமிழகத்தில் ஸ்ரீராமநவமி சிறப்பாக நடைபெறும் கோவில்கள்

கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவில் ஸ்ரீ ராமஸ்வாமி கோயில். இங்கு பட்டாபிஷேக ராமர் (சீதா, லட்சுமணர், பரதன், சத்ருக்னன், ஹனுமான்) ஒரே சந்நதியில் சேவிக்கலாம்..சுவர்களில் முழு ராமாயணக் காட்சிகள் ஓவியமாக உள்ளது.இங்கு ஸ்ரீராமநவமி ஸ்ரீ சீதா ராம கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக அலங்காரத்தோடு நடைபெறும். ராமாயண உபந்யாசங்கள், பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். தஞ்சாவூர் அருகே உள்ள பிரபல கோவில் கோதண்டராமஸ்வாமி கோயில்.இங்கு 10-12 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் ராமநவமி மிகவும் சிறப்பாக நடைபெறும் பழமையான கோவில். இங்கு சீதா ராம கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடக்கும்.

17. மாம்பலம் கோதண்டராமர் கோயில் ராமநவமி

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் ராமநவமி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தலம் பத்ராசலம் பாணியிலான வழிபாட்டு முறைக்கும், சுமார் 200 ஆண்டுகால பழமைக்கும் பெயர் பெற்றது. ராமநவமி நாட்களில் சீதா, லட்சுமணருடன் பட்டாபிராமருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா மற்றும் உற்சவங்கள் விமரிசையாக நடைபெறும், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர்.

மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீராம் சமாஜ், அயோத்தி அஸ்வமேத மண்டபத்திலும் ராமநவமி விழா பிரம்மாண்டமாக, பல நாட்கள் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள வடுவூர் ஸ்ரீகோதண்டராமர் கோயில், ‘‘தட்சிண அயோத்தி” என்று அழைக்கப்படும் முக்கியமான ராமர் தலம். இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் ஸ்ரீராம நவமி விழா, பல்லக்குச் சேவை, திருக்கல்யாணம் மற்றும் பிரம்மாண்ட தேரோட்டத்துடன் மிகவும் விசேஷமாக, லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

18. பஞ்ச ராம தலங்கள்

தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமர் அருள் பாலிக்கும் ஐந்து முக்கியக் கோவில்கள் பஞ்சராமர் தலங்கள் எனப் போற்றப்படுகின்றன. இந்தத் தலங்களில் உள்ள ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் அனுமன் மூர்த்திகள், அயோத்திக்கு நிகராகக் கருதப்படுகிறார்கள்.

பஞ்ச ராமர் தலங்கள்:

1. வடுவூர் கோதண்டராமர் கோயில்
2. தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில்
3. பருத்தியூர் ராமர் கோயில்
4. முடிகொண்டான் கோதண்டராமர் கோயில்
5. அதம்பார் கோதண்டராமர் கோயில்

இத்தலங்களில் ஸ்ரீ ராமநவமி வெகுசிறப்பாகக் கொண்டாடப்படும். இதுதவிர ஒவ்வொரு ஊரிலும் உள்ள பெருமாள் கோயில்களில் உள்ள ஸ்ரீராமர் சந்நதியில் பிரம்மோற்சவமாகவோ அல்லது தனி நாள் உற்சவமாகவோ (27.3.2026 மட்டும்) அனுசரிக்கப்படும்,

19. ராம நாமம் சொல்லுங்கள்

ஸ்ரீராமநவமி வேறு. ஸ்ரீ ராமாயணம் வேறு அல்ல. ஸ்ரீ ராமாயணத்தில் ஒரு சில ஸ்லோகங்களையாவது நாம் அன்றைய தினம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீராமஜெயத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். ராமநாமத்தை கோடிமுறை எழுதுவதற்கு ‘‘ராம கோடி” என்று பெயர். தினமும் நீராடியவுடன் பக்தியுடன் ராமநாமத்தை எழுத வேண்டும். தினமும் ஆயிரம் முறை இதை எழுதினால், 30 ஆண்டுகளில் இந்த எண்ணம் பூர்த்தியாகிவிடும். இப்படி எழுதிய நோட்டுக்களை பூஜை அறையில் வைத்து பூஜிக்க வேண்டும். இப்படி ராமநாமம் எழுதி பூஜித்தால் அந்த குடும்பத்தின் இருபத்தியோரு தலைமுறை புண்ணிய பலத்தோடு வாழும்.

20. ஆயிரம் நாமம் சொன்ன பலன்

ஸ்ரீ ராமநாம மகிமையை எழுத்தாலோ சொல்லாலோ விவரிக்க முடியாது. அற்புத சக்தி பொருந்திய இந்த மந்திரத்தின் மேன்மையை பரமேஸ்வரனே பார்வதிதேவிக்குச் சொல்வதாக விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வருகிறது. ‘‘ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே” என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடிவரும். ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம் வரும். அதற்கு கணித அடிப்படையில் பதில் உள்ளது. எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன.

‘‘ர” என்ற எழுத்துக்கு எண் 2ம், ‘‘ம” என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும். மேலே ஸ்லோகத்தில் ‘‘ராம” என்ற நாமம் மூன்று முறை வருகின்றது. அதாவது 2×5 2×5 2×5. என்றால் 2×5=10×2=20×5=100×2=200×5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே. இதுதான் ராம நாமத்தின் அற்புதம். அதனால்தான், ராம ராம ராம என்ற சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாம பலன் கிடைக்கும். இதை வேறு விதமாகச் சொல்லலாம்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”
(கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14)

21. ராமநவமி கொண்டாடும் முறை

அதிகாலை எழுந்து நீராடி வீட்டைத் தூய்மைப்படுத்தி அழகான கோலம் போட்டு மாவிலை தோரணம் கட்டி அழகு படுத்த வேண்டும். வீட்டின் பூஜை அறையில் ராமச்சந்திர மூர்த்தி பட்டாபிஷேக படம் வைத்து அலங்காரம் செய்து சிறப்புப் பூஜைகள் செய்ய வேண்டும். ராமர் படத்திற்கு துளசி மாலை அணிவித்து ‘ஸ்ரீராமஜெயம்’ என்று 108 அல்லது 1008 முறை எழுதி அதையும் மாலையாகப் போட வேண்டும். ராமரின் திருநாமங்களை ஜபிப்பது சிறப்பு.

மந்திரம் எதுவும் தெரியாதவர்கள் ‘ஸ்ரீராமஜெயம்’ என்ற மந்திரத்தை மட்டும் 108 முறை ஜபம் செய்தால் போதுமானது. பானகம், நீர்மோர், பருப்புப் பாயசம், வடை, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் மற்றும் பழங்கள் தயாரித்து நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ராமாயணக் கதைகளைக் கேட்பது, ராமாயண பாராயணம் செய்வது அல்லது சுந்தர காண்டம் படிப்பது மன அமைதியையும், புண்ணியத்தையும் தரும். பெரும்பாலான பக்தர்கள் இந்தநாள் முழுவதும் உணவருந்தாமல் விரதமிருந்து, மாலையில் பூஜை முடித்து நைவேத்தியம் உண்டு விரதத்தை முடிப்பார்கள். பானகம், நீர்மோர், பாயசம் ஆகியவற்றைத் தயாரித்து அருகில் உள்ள கோவில்களுக்குக் கொடுத்து பக்தர்களுக்கு விநியோகிப்பதும் சிறப்பான வழிபாடு ஆகும்.

22. பங்குனி உத்திரம்

இனி பங்குனி உத்திரம் பற்றி சில முக்கிய விஷயங்களைப் பார்ப்போம். பங்குனி உத்திரம் முருகனுக்குரிய சிறப்பு நோன்பு நாளாகக் கொண்டாடப் படுகிறது. தமிழ் மாதங்களில் பன்னிரண்டாம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் பன்னிரண்டாம் நட்சத்திரம் உத்திரம். எனவே பன்னிரண்டு கைகள் உடைய வேலவனுக்குச் சிறப்பான நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திரம் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

அன்று மாலை வரை உத்திர நட்சத்திரம். அதற்குப் பிறகு அஸ்த நட்சத்திரம் வருகிறது. அதோடு பௌர்ணமியும் அன்று காலை முதல் இருக்கிறது. எனவே, பெரும்பாலான ஆலயங்களில் ஏப்ரல் ஒன்றாம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது .சில கோயில்களில் மட்டும் மார்ச் 31 செவ்வாய் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் – தெய்வானை, சிவன் – பார்வதி, மற்றும் ஆண்டாள் – ரங்கநாதர் ஆகியோரின் திருமணங்கள் இந்த நாளில் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

23. எல்லா ஆலயங்களிலும் சிறப்பு

பங்குனி உத்திரத்தை பொருத்தவரையில் அநேகமாக எல்லா கோயில்களிலும் சிறப்பான திருநாளாக இருக்கும். முருகன் கோயில்களில் விசேஷமான வழிபாடும் அபிஷேகமும் இருக்கும். சிவன் கோயில்களிலும் பங்குனி உத்திரம் விசேஷம். பல அம்மன் கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். வைணவ கோயில்களிலும் ( ஸ்ரீரங்கம் உட்பட) பங்குனி உத்திரம் விசேஷமான நாளாகக் கொண்டாடப்படும்.

எல்லாக் கோயில்களிலும் முக்கியமாகத் தெய்வத் திருமணங்கள் நடைபெறும். அறுபடை வீடுகளில் ஆரம்பித்து சாதாரண கிராமங்களில் இருக்கக்கூடிய முருகன் கோயில்கள் உட்பட பங்குனி உத்திர திருநாள் பரவசமாய் கொண்டாடப்படும். சிங்கப்பூர், மலேசியா, மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கனடா நாடுகள் என பல நாடுகளிலும் பங்குனி உத்திரம் நம் நாட்டைப் போலவே அன்றைக்கு காவடி எடுத்தல், பால்குடம் சுமத்தல் என அத்தனை வைபவங்களோடு நடைபெறும்.

24. பங்குனி உத்திரத்தில் நடந்த தெய்வத் திருமணங்கள்

சைவத்திலும் வைணவத்திலும் உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு பங்குனி உத்திரத்தை ஒட்டித்தான் திருமண உற்சவங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. அதன் அடிப்படையில்தான் இப்பொழுதும் கோயில்களில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. என்னென்ன திருமண வைபவங்கள் என்பதைப் பார்ப்போம்.

1. சிவன் – பார்வதி திருமணம்
2. தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன் – சீதை, லட்சுமணன் – ஊர்மிளா, பரதன் – மாண்டவி, சத்ருக்னன் – சுருதகீர்த்தி திருமணங்கள்
3. முருகன் – தெய்வானை திருமணம்
4. பெருமாள் – மகாலட்சுமி திருமணம்
5. ஆண்டாள் ரெங்கமன்னார் திருமணம்
6. மீனாட்சி திருமணம்
பங்குனி உத்திரத்தன்று சில கோவில் களில் தீர்த்தவாரியும் நடைபெறும்.

25. பெருமாள் கோயில்களில் பங்குனி உத்திரம்

பெருமாள் கோயிலிலும் பங்குனி உற்சவம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். ஸ்ரீ வில்லிபுத்தூரில் பங்குனி உத்திர ஆண்டாள் திருக்கல்யாணம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தில்லை கோவிந்தராஜரின் அவதார திருநட்சத்திரம் பங்குனி உத்திரம் என்பதால், தேவாதி தேவனுக்கும் புண்டரீகவல்லித் தாயாருக்கும் திருக்கல்யாண மஹோத்சவம் நடைபெறும். காஞ்சியில் வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரம் காலை பெருமாள், தாயார், மலையாள நாச்சியார் திருமஞ்சனம் நடைபெறும்.

அன்று மாலை உபய நாச்சியார், தாயார் புறப்பாடாகி, நான்கு கால் மண்டபத்தில் மாலை மாற்றுதல் நடைபெறும். இன்று ஒருநாள் மட்டும் தாயார் சந்நதியில் பெருமாள் எழுந்தருள்வார். சீர்காழிக்கு அருகே உள்ள திருவாலி திருநகரி தலத்தில் பங்குனி உத்திரம் பெருவிழாவாக நடைபெறும். இத்திருவிழாவின் 9ம்நாள் இரவு வேடுபறி உற்சவம். 9ம் நாள், பகலில் திருவாலியில், திருநகரி வயலாளி மணவாளனுக்கும், அமிர்த கடவல்லி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.

26. ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் சிறப்பாக நடைபெறும் ஆலயங்களில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலும் ஒன்று. அங்கு பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா 14 தினங்கள் நடைபெறும். அதன் கொடியேற்றம் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் நான்கு ராஜ வீதிகளிலும் எழுந்தருள்வார். மார்ச் மாதம் 27-ஆம் தேதி, 63 நாயன்மார்கள் உற்சவமும், 28-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும், மார்ச் 31-ஆம் தேதி பத்தாம் நாள் உற்சவமாக இரவு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

பங்குனி உத்திரத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வுகள் விமரிசையாக நடைபெறும். காலை நேரத்தில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர், பஞ்ச மூர்த்திகளுடன் வைகை வடகரையில் உள்ள திருவாப்புடையார் கோயிலுக்குச் சென்று, மாலை நேரத்தில் சிறப்பு அலங்காரத்தில் திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும். அம்மன் மரவர்ண சப்பரத்திலும், சுந்தரேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதி உலா வருவர்.

27. பழனியில் பங்குனி உத்திரம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் பிரபலம். 10 நாட்கள் நடைபெறும் விழாவில், திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும். 10 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் காலை தந்தப் பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி – தெய்வானையுடன் எழுந்தருள லட்சக்கணக்கான பக்தர்கள் பால், பன்னீர், இளநீர் காவடிகளை ஏந்தி, பாதயாத்திரையாக வந்து மகா அபிஷேகம் செய்து, தங்க ரதத்தில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். பங்குனி உத்திரத்தன்று வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக் கல்யாணமும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறும்.

28.மயிலையில் 63 நாயன்மார் விழா

சென்னையில் உள்ள சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். பிப்ரவரி 26, 2026-ல் மகா அபிஷேகம் மற்றும் லக்ன பத்திரிகை வாசிப்புடன் தொடங்கி 10 நாள் திருவிழா நடக்கும். கொடியேற்றம், அதிகார நந்தி, அறுபத்து மூவர் வீதி உலா, பங்குனி உத்திரத் திருக்கல்யாணம் ஆகியவை முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி அதிகார நந்தி, 29-ஆம் தேதி தேரோட்டம், மார்ச் 30-ஆம் தேதி அறுபத்து மூவர் வீதி உலா , ஏப்ரல் ஒன்றாம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும். பங்குனி உத்திரத்தில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் திருக்கல்யாண திருவிழாவும் நடைபெறும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி-வள்ளி திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு வழிபாடுகளும் பிரசித்தமாக நடைபெறும்.

29. அம்மனுக்கு முழு அபிஷேகம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருவிழாவாகும். இக்கோயிலின் அம்மன் சந்நதியில், ஆண்டின் மூன்று முக்கிய நாட்களில் (ஆடிப்பூரம், நவராத்திரி நவமி, பங்குனி உத்திரம்) ஒன்றான பங்குனி உத்திரத்தன்று திரிபுரசுந்தரி அம்மனுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த நாளில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறும்.

குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாளாகவும், பங்குனி உத்திர தினம் இருக்கிறது. இத்தினத்தில் குலதெய்வக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், குலம் சிறக்கும். மூதாதையரின் ஆசியும் கிடைக்கும். பங்குனி உத்திர நாளில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வதும் சிறப்பானது. பங்குனி உத்திரத்தன்று முருகனை மனமுருகி வணங்கினால் திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் சுபமாக முடியும். நம்மால் முடிந்த அளவுக்கு மஞ்சள், சரடு, குங்குமம், கண்ணாடி என மங்கலப் பொருட்களை பெண்களுக்கு வழங்குவதும் விசேஷ பலன்களைக் கொடுக்கும்.

30.விரதம் இருப்பது எப்படி?

நினைத்ததெல்லாம் நிறைவேற்றும் பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். விரதம் இருப்பவர்கள் முழு உபவாசம் இருக்க வேண்டும். ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள், பசி தாங்க முடியாதவர்கள், பால் – பழம் அருந்தலாம். பங்குனி உத்திரத்தன்று காலையில் நீராடி சங்கல்பம் செய்து கொண்டு விரதத்தைத் தொடங்கி விட வேண்டும். அன்று முழுதும் முருகன் நாமத்தை ஓதவேண்டும்.

பக்திப் பாமாலைகளை குழுவாகவோ தனியாகவோ பாடலாம். மாலையில் பெருமாள் முருகன், சிவன், கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். பெருமாள் தாயார் அபிஷேகம் பாருங்கள் மற்றும் சிவபெருமானுக்கும், உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை பாருங்கள். ஸ்ரீ ராமாயணம் மகாபாரதம், சிவபுராணம், ஸ்கந்தசஷ்டி கவசம், திருப்புகழ் தேவாரம் போன்ற வற்றைப் படிக்கலாம்.

எஸ். கோகுலாச்சாரி

Tags : Srirama Navami ,Srirama ,
× RELATED நிம்மதி அருள்வாள் நிசும்பசூதினி