×

100 புதிய ஏர்போர்ட், 200 ஹெலிபேட்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ரூ.28,840 கோடியில் மேம்படுத்தப்பட்ட உடான் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘இந்த மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், மாநில அரசுகளின் உதவியுடன் தற்போது விமானச் சேவை இல்லாத ஓடுபாதைகளை மேம்படுத்தி, நாடு முழுவதும் 100 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும். இதற்காக அடுத்த 8 ஆண்டுகளில் ரூ.12,159 கோடி ஒதுக்கப்படும். மேலும், தலா ரூ.15 கோடி மதிப்பில் 200 நவீன ஹெலிபேடுகள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3,661 கோடி தேவைப்படும்.

இத்திட்டம் 2026-27 முதல் 2035-36 வரை 10 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும். ஆத்மநிர்பர் பாரத் கொள்கையின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வாங்க ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார். இதுதவிர, இந்தியாவில் குடியேற்றம், விசா வழங்குதல் மற்றும் வெளிநாட்டினர் பதிவு தொடர்பான செயல்பாடுகளை ஒன்றிணைத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘குடியேற்றம், விசா, வெளிநாட்டினர் பதிவு மற்றும் கண்காணிப்பு’ திட்டத்தை, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Union Cabinet ,New Delhi ,Modi ,Delhi ,UDAN ,Union Information and Broadcasting Ministry… ,
× RELATED மாநிலங்களவையில் தாக்கல் மத்திய...